கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!
- அ சுபாலட்சுமி
- என்னங்க டீ, காபியெல்லாம் சாப்பிட்டாச்சா.. சரி வாங்க இன்னிக்கு ஒரு பழமொழி பற்றிப் பார்ப்போம்.
இதுதாங்க நாம பேசி வரும் பழமொழி - கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே!
சரியான பழமொழி: "கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே"
உண்மையான பொருள்: எவ்வளவு பெரிய வறுமை அல்லது இழப்பு ஏற்பட்டாலும் எக்காலத்திலும் திருட்டுத் தொழிலில் (தீய வழியில்) ஈடுபடக்கூடாது என்பதாகும்.
வார்த்தைகளின் அர்த்தம்:
கப்பல் கவிழ்வது: கடலில் வணிகம் செய்து சேர்த்த பெரும் செல்வம் முழுவதுமாக அழிந்து போவது அல்லது பெரிய நஷ்டம் ஏற்படுவது.
கன்னக்கோல்: திருடர்கள் வீட்டின் சுவரில் ஓட்டைப் பிரித்து (துளையிட்டு) உள்ளே நுழையப் பயன்படுத்தும் ஒரு கருவி (கன்னமிடுதல் = திருடுதல்).
பழமொழியின் மாற்றம்:
காலப்போக்கில் இச்சொல் வழக்கில் மாற்றம் ஏற்பட்டு, யாரேனும் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தால் எந்த கப்பல் கவுந்துருச்சுனு கன்னத்தில கைய வச்சுருக்க என்றும் "கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே" (கவலைப்பட்டு உட்காராதே) என்று மருவிவிட்டது.
ஆனால் இதன் உண்மையான மற்றும் ஆழமான வடிவம் 'கன்னக்கோல்' என்பதாகும். அதாவது, தொழில் அழிந்து முற்றிலும் ஏழையானாலும் மானத்தை விற்றுத் திருடச் செல்லக்கூடாது என்ற நம் முன்னோர்களின் நேர்மை மற்றும் ஒழுக்க நெறியை இது நமக்கு உணர்த்துகிறது.
இனிமேலாவது பொருள் அறிந்து இதைப் பயன்படுத்துவோம் சரியா!
(அ.சுபாலட்சுமி M.Sc,M.Ed, ஆசிரியர். பொழுதுபோக்கு: ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தல்)