Poem: ஆத்தோரம் பூத்த கன்னி

Su.tha Arivalagan
Jul 08, 2026,12:30 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்

ஆத்தோரம் பூத்தவளே 
அழகு வண்ண ரோஜாவே
சேத்துல பூத்திருக்கும் 
செவ்வரளிப் பூச்சரமே

மலர்ந்து சிரிப்பவளே 
மனம் வீசும் பூங்கிளியே
காத்துலே வாசம் வந்து 
கலக்குதடி ஏ மனசே

மானே மரகதமே 
மாமன்காரன் பெத்தவளே
தேனே திரவியமே 
தெவிட்டாத தெள்ளமுதே 

வானம் கருக்குடி
வண்ண மயில் ஆடுதடி
கானக் கருங்குயிலே
காவியமும் பாடுதடி



வாழைக் குருத்தாக 
வளர்ந்திருக்கும் என்னவளே
வாஞ்சையோடு கூப்பிடுறேன் 
வாடி புள்ளே ராசாத்தி

சோடிக் கிளியாக சோலையிலே பாடிடுவோம்
காலையிலே வாடி புள்ளே 
காத்திருக்கேன் தோப்புலதான்

கண்டாங்கி சேலை கட்டி 
கைநிறைய வளையல் இட்டு
நெத்தியிலே பொட்டு வச்சு 
நிம்மதியாய் வாடி புள்ளே

மானா மதுரையிலே 
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
கொண்டையிலே சூடிக்கிட்டு 
குணமுடனே வாடி புள்ளே

தோப்புக்குள்ளே மாமரத்தில் 
தூளி கட்டி ஆடிடலாம்
ஆலம் விழுதாட்டம் 
ஆடி மகிழ்ந்திடலாம்

பந்தங்கள் கூட்டி வந்து 
பரிசமும் போட்டிடுவோம்
மாங்கல்யம் பூட்டி நல்ல 
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்

(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)