என்னைத் தவிக்க விட்டு நீயும் எங்கே தான் சென்றாய்!

Su.tha Arivalagan
Oct 29, 2026,10:18 AM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன், திண்டுக்கல்


உள்ளம் பதறுதடி 

கண்ணே உன்னை  நினைக்கயிலே 

என்னைத் தவிக்க 

விட்டு நீயும் 

எங்கே தான் சென்றாய்


கனவோடு நான் உறங்க 

கால் கொலுசு ஓசையிட

கண் விழித்து 

நான் பாத்தேன் 

காணலியே எங்கே சென்றாய்


மான் போல 

நீ ஓட 

மயக்கத்திலே நான் தேட 

அந்திப் பொழுதாச்சு 

அடையும் இடம் காணலியே 




கரடுமுரடான காட்டுக்குள்ளே 

கதிகலங்கும் நேரத்திலே

இருட்டிலே என்ன விட்டு 

என்னவளே எங்கே சென்றாய்


ஆழக்கடல் தாண்டி 

அலையாக வந்தவளே 

நங்கூரம் போட்டாலும் 

நழுவிக் கொண்டு போவாயோ


பின்னல் ஜடை போட்டு 

பிச்சிப்பூ சரம் சூட்டி

மின்னலாய் நீ போக 

பிச்சிப்பூ வாசம் என்ன

பின்தொடரச் சொல்லுதடி


கால் தடம் 

நான் பாத்தேன் 

கவனம் சிதறுதடி

கண்ணிமைக்கும் நேரத்திலே 

காணாமல் போறியடி


மண்ணில் தடம் 

மறைய 

மாமன் கண்ணில் 

நீர் வடிய 

இரவும் விடிந்ததடி 

ஏ தூக்கம் கலைந்ததடி


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)