கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!

Su.tha Arivalagan
Sep 24, 2026,03:03 PM IST

- கவிஞர் பிஎஸ் முருகேசன், திண்டுக்கல்


கொடியில் பூத்த மல்லிகையே 

எந்தன் மடியில் 

தவழுகிறாய்


கொஞ்சும் அழகு 

மங்கை அவளே

மனதைக் கொள்ளை 

கொள்கிறாய்


சின்ன இடையில் 

சிட்டா பறந்து 

சிறகு விரிக்கிறாய்

கண்கள் மூடும் 

தூக்கத்தின் கனவில் 

கண்டேன் சிரிக்கிறாய்




மண்ணில் விளையும் 

மாணிக்கம் போல

மதிப்பில் உயர்கிறாய்

விண்ணில் தோன்றும்

நட்சத்திரம் போல் 

வண்ணம் தருகிறாய்


கிண்ணத்தில் இருக்கும் 

பசும் பாலாக

உள்ளம் வெள்ளையடி

கிட்டத்தட்ட பதினெட்டு வயசு 

அது தான் தொல்லையடி


அன்புடன் வளர்க்கும் 

ஆசை மாமன் 

அழகுப் பிள்ளையடி

ஆடிப் பாடி 

கூடி சிரிக்கும் 

முல்லைப் பூ நீயடி


பண்ணை வீட்டுத் தோட்டத்தில் எங்கும் 

பவனி வருபவளே

பாரதி கண்ட 

புதுமைப் பெண்ணே 

தங்கத் திருமகளே


வங்கக் கடலில் 

குளிக்கும் முத்தே 

தங்கத்திலே ஜொலிக்கும் 

முத்தே


சிங்கம் போல 

எழுந்து நடந்து 

வாடி என்னவளே

சிகரம் கூட 

வாழ்த்தும் உன்னை 

வாழ்க மணமகளே


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)