கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
Sep 14, 2026,11:01 AM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
காச்சுக் கிடக்குதடி
கத்திரிக்காய் செடியிலே
பூச்சி இல்லாமே புடுங்கி வாடி
சின்னப் பொண்ணு மடியிலே
அறுத்து கொழம்பு வச்சா
வேகுமடி நொடியிலே
அற்புதமாய் நறுமணக்கும்
அறுசுவை உணவிலே
கருத்து மிகுந்தவளே
கருத்துக்காளை மருமகளே
உருத்தான சொந்தம் நீ
உசுரான பந்தம் நீ
பாசம் கொறையாத
பத்தரை மாத்து தங்கம் நீ
அன்போடு உபசரிக்கும்
அட்சய பாத்திரம் நீ
அச்சமின்றி சொல்வேன்
அச்சாணி நீ என்று
உச்சாணிக் கொம்பில்
உன்னை வைத்தல் நன்று
மச்சான் ஏ மனசிலே
மகுடம் போல நீ
சிகரம் போல
மின்னுகிறே
சீக்கிரமா வா நீ
சிறகடித்து பறப்போம்
காதல் வானில்
சிந்தை குளிரட்டும்
சிறப்புடன் இளவேனில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)