ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ADR) வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 23 சதவீதம் பேர் குற்ற வழக்குகளை எதிர்கொள்பவர்கள் என்பதும், 41 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் 294 வேட்பாளர்களில் 291 பேரின் பிரமாணப் பத்திரங்களை ADR அமைப்பு விரிவாக ஆய்வு செய்தது. இதில் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த 34 பேர், மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த 63 பேர், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் 80 வேட்பாளர்கள் மற்றும் 117 சுயேச்சைகள் அடங்குவர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் 66 வேட்பாளர்கள் (23%) தங்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது கடந்த 2021 தேர்தலை விட (17%) அதிகமாகும். குறிப்பாக, 38 வேட்பாளர்கள் மீது கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கட்சி வாரி விபரங்கள்:
திமுக: 12 வேட்பாளர்களில் 6 பேர் (50%) குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
பாஜக: 10 வேட்பாளர்களில் 5 பேர்.
காங்கிரஸ்: 21 வேட்பாளர்களில் 3 பேர்.
என்.ஆர். காங்கிரஸ்: 16 வேட்பாளர்களில் 4 பேர்.
கோடீஸ்வர வேட்பாளர்கள் :
தேர்தலில் பணத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. மொத்தம் 119 வேட்பாளர்கள் (41%) தங்களைக் கோடீஸ்வரர்களாக அறிவித்துள்ளனர். 2021-ல் இது 23 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய கட்சிகளின் கோடீஸ்வர வேட்பாளர்கள் விபரம்:
பாஜக: போட்டியிடும் 10 வேட்பாளர்களுமே (100%) கோடீஸ்வரர்கள்.
என்.ஆர். காங்கிரஸ்: 16 வேட்பாளர்களுமே (100%) கோடீஸ்வரர்கள்.
திமுக: 12 வேட்பாளர்களில் 11 பேர்.
காங்கிரஸ்: 21 வேட்பாளர்களில் 17 பேர்.
ஆய்வு செய்யப்பட்ட 291 வேட்பாளர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2,099 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளரின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 7.21 கோடியாக உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவும் அரசியல் கட்சிகளும்:
குற்றப்பின்னணி கொண்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கான காரணத்தை அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், "வேட்பாளரின் பிரபலம்", "சமூகப் பணி" போன்ற மேம்போக்கான காரணங்களையே கட்சிகள் முன்வைப்பதாக ADR அதிருப்தி தெரிவித்துள்ளது.
சட்டத்தை உருவாக்குபவர்களே சட்டத்தை மீறுபவர்களாக இருப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.