புதுச்சேரி திமுக கூட்டணியிலும் சலசலப்பு...தொகுதி பங்கீடு உறுதி செய்ய முடியாத நிலை

Su.tha Arivalagan
Mar 17, 2026,05:07 PM IST

புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அங்குள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் தலைமை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.


நிர்வாகிகளின் அதிரடி கோரிக்கை: 


புதுச்சேரியில் ஏப்ரல் 09ம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி, நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் துவங்கிய பிறகும் கூட இதுவரை புதுச்சேரியில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலை உள்ளது. 

மாநில திமுக நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, புதுச்சேரியில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கீடு செய்ததைக் குறிப்பிட்ட நிர்வாகிகள், தற்போது புதுச்சேரியில் திமுகவின் பலம் அதிகரித்துள்ளதாகவும், எனவே இந்த முறை திமுகவே கூட்டணியைத் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


திமுக - காங்கிரஸ் இடையே நீடிக்கும் இழுபறி : 




புதுச்சேரி அரசியலில் நீண்டகாலமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வருகின்றன. இருப்பினும், தற்போது நிலவும் அரசியல் சூழலில் இரு கட்சிகளுக்கும் இடையே சில சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது. கூட்டணியின் தலைமைப் பொறுப்பை யார் ஏற்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை புதுச்சேரியில் காங்கிரஸ், பெரியண்ணன் பாத்திரத்தை வகித்து வந்த நிலையில், இப்போது திமுக அந்த இடத்தை எதிர்பார்க்கிறது. இரு கட்சிகளுமே அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கைப்பற்றுவதில் இரு தரப்பிலும் கடும் போட்டி நிலவுகிறது.


கள நிலவரம் என்ன? 


புதுச்சேரியில் தற்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால், எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமை அவசியம். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இந்த இழுபறி தொண்டர்கள் மத்தியில் ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.திமுக தலைமையை ஏற்க காங்கிரஸ் சம்மதிக்குமா அல்லது புதுச்சேரியில் தனது செல்வாக்கை விட்டுக்கொடுக்காமல் காங்கிரஸ் பிடிவாதம் காட்டுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும். இந்த விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், புதுச்சேரி அரசியல் களம் தற்போது அறிவாலயத்தை நோக்கியே திரும்பியுள்ளது.