அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Meenakshi
Dec 10, 2025,05:45 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.


தமிழகத்தை போலவே அடுத்த ஆண்டு புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி புதுச்சேரியில் மக்களை மகிழ்விக்க ரொக்கப்பணம் அல்லது பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பரிசுப் பொருட்களின் தொகுப்பு வழங்கப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இது தை மாதத்தின் தொடக்கத்தையும், சூரிய வழிபாட்டையும் குறிக்கும் அறுவடைத் திருவிழாவாகும். இத்தகைய பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 




இந்த பொங்கல் தொகுப்பில், அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட 750 ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள்  வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி முதல்  ரேஷன் கடைகளில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் பண்டிகையின் போது பரிசுத் தொகுப்புக்கு பதிலாக 750 ரூபாய் ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது.