வசந்தகால நினைவுகள்!
- புலவர் ப. ஈஸ்வரநாதன்
குதுகலமாய் இருக்கும்
குட்டப் பாவாடை
வாலிபப் பெண்ணின்
வசியம் தாவணி
சுமையாய் சுமக்கும் முதுகில்
புத்தகப் பை
சொட்டும் நீரோடும் பாதிப்பின்னிய
கூந்தல் அழகு
ஓரப் பார்வையிலே ஓராயிரம் கனவைத் தூண்டும்
கன்னியின் பார்வை
சிறுவர்களின்
சிலம்பாட்டம்
திருவிழாக்களில்
தேரோட்டம்
வளையல் கடையில்
கொலுசுச் சத்தமாய்
சிரிக்கும்
தாவணிக் கூட்டம்
யானையின் ஆசிர்வாதத்திற்குப் பயந்து ஏங்கும்
பலரின் தவிப்பு
நிலாச்சோறு சாப்பிட்ட நிதர்சனமான
நாட்கள்
வஞ்சமில்லாத நெஞ்சமாய் வாழ்ந்த
இளமைப்பருவம்
குடை பிடித்து நடந்தாலும்
உடலில் படும்
சாரல்
மார்கழியிலும்
குளிர்ந்த நீரில் குளிக்கும்
குதூகலம்
பங்காளி மச்சான் மாமன் என்று வலம்வரும்
சொந்தங்கள்
இன்னும் இன்னும்
பல நினைவுகளோடு
அந்தக் கால
நினைவுகள்
இன்றும் ஆழ்மனதில்!
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)