அரபிக் கடலில் மெல்ல மெல்ல நகரும் காற்றழுத்தம்.. புனேவுக்கு கன மழை எச்சரிக்கை
புனே: அரபிக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தம் நகருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால் புனேவில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே தொடர்ந்து பெய்து வரும் மழையால், புனேவின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கிழக்கு-மத்திய அரபிக்கடலில் உருவான ஒரு வானிலை அமைப்பு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மேற்கு கடற்கரையை நோக்கி வருவதால், புனேவில் கனமழை பெய்யும் என புதன்கிழமை IMD எச்சரிக்கை விடுத்தது.
"கிழக்கு-மத்திய அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இன்று, அக்டோபர் 29, 2025 அன்று மாலை 1730 மணிக்கு, இது கிழக்கு-மத்திய அரபிக்கடல் பகுதியில், 17.9°N அட்சரேகை மற்றும் 69.0°E தீர்க்கரேகையில் மையம் கொண்டுள்ளது. இது குஜராத்தின் வெராவலுக்கு தெற்கு-தென்மேற்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும், மகாராஷ்டிராவின் மும்பைக்கு மேற்கு-தென்மேற்கே 430 கி.மீ தொலைவிலும், கோவாவின் பாஞ்சியத்திற்கு மேற்கு-வடமேற்கே 580 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்திற்கு இது கிழக்கு-மத்திய அரபிக்கடல் வழியாக மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது," என்று IMD தெரிவித்துள்ளது.
இதையடுத்து இன்று இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 31ம் தேதியன்று பெரிய அளவில் மழை இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.