புதியதோர் உலகம் செய்வோம்! (கவிதை)
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புத்தம் புது பூமியை படைப்போம் ..!!
பழையன கழிந்து, புதியன புகுந்து வர,
சமத்துவம் ஓங்கி, சந்தோசம் நிறைந்திட ,
ஜாதி மத ஏற்றத்தாழ்வுகள் அகன்றிட,
ஆண் பெண் சரிநிகர் சமானமாகிட,
அறியாமை அகன்று, அறிவொளி வீச,
அமைதி நிலைத்து, ஆனந்தம் பெருக,
அன்பை பெருக்கி, அறத்தை வளர்க்க ,
மனிதன் உயர்ந்து, மனித நேயம் தலைக்க,
இயற்கையோடு இணைந்து, இசைவுடன் வாழ,
நம்பிக்கை நாற்றுநட்டு, நல்எதிர்காலம் படைக்க,
புதியதோர் உலகம் செய்வோம் ..!!
புவியின் மக்களை மகிழ்விப்போம்..!!
அங்கு பசியும் இல்லை. பிணியும் இல்லை .
ஏழ்மையும் இல்லை. ஏற்றத்தாழ்வும் இல்லை .
துன்பமும் இல்லை. துயரமும் இல்லை.
ஜாதியும் இல்லை. மதமும் இல்லை .
பாலியல் வன்கொடுமை அற்ற உலகம் .
சமமான வேலை வாய்ப்புள்ள உலகம் .
நல்ல இயற்கைசூழல் மிகுந்த புதிய உலகம் .
நெகிழி அற்ற அற்புத உலகம் .
படைத்து புதியதோர் உலகம் செய்வோம்..!!
பாரதிதாசனின் கனவினை நனவாக்குவோம்..!!
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).