புதியதோர் உலகு செய்வோம்!
- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி.
பாரதிதாசனின் புரட்சிகரமான கவிதை வரிகள் "புதியதோர் உலகு செய்வோம்". இது வெறும் கவிதை வரி அல்ல .அது ஒரு நல்ல குடிமகனின் ஆன்மாவில் இருந்து வந்த நம்பிக்கையின் சாரம். இவ்வரிகள் ஒரு சிறந்த உலகை நோக்கிய நமது தேடலில், மக்களுக்கு ஒரு உந்து சக்தியாக அமையும் . மக்கள் ஒன்றிணைந்து உழைத்து, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த உலகத்தை வேரறுத்து, சமத்துவம், நீதி, அமைதி, அன்பு நிறைந்த ஒரு சிறந்த உலகை உருவாக்க வேண்டும் என்ற பாரதிதாசனின் கனவை இவ்வரிகள் வெளிப்படுத்துகிறது.
புதிய உலகின் இலக்கணம்
புதியதோர் உலகம் என்பது வெறும் கட்டிடங்களாலும், சாலைகளாகவும் ஆன புதிய உலகம் அல்ல. அது ஏற்றத்தாழ்வு அற்ற நிம்மதியான புது உலகம். அங்கு ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழு திறமையை வெளிப்படுத்த தேவையான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும். புதிய உலகில் எங்கும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு, இயற்கையோடு இயைந்த சுகாதாரமான, ஆரோக்கியமான வாழ்வு அனைவருக்கும் கிட்ட வேண்டும். சுருக்கமாக சொன்னால் இது மனித நேயம் மிக்க, அன்பு நிறைந்த ஒரு புதிய உலகம். ஆண் பெண் சரிநிகர் சமானமாய் நடத்தப்படும் புதிய ஆனந்தமான உலகமே அதன் இலக்கணம்.
புதிய உலகம் ஏன் தேவை..??
இன்றைய உலகில் நாம் பல சவால்களை எதிர்கொள்கிறோம் .காலநிலை மாற்றம், சாதி, சமய ,சமூக ஏற்றத்தாழ்வுகள் ,வன்முறை , பெண் குழந்தைகளின் பாலியல் வன்கொடுமை, பெண்களின் குடும்ப வன்முறை மற்றும் கொடிய நோய்கள் என பல பிரச்சினைகள் மனித குலத்தின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக இருக்கின்றன. இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளவும், நிலை தன்மையுடன் கூடிய நிம்மதியான ஒரு நல்ல உலகத்தை உருவாக்கவும் ,பாரதிதாசனின் கனவு நனவாவது இன்றியமையாதது. நாம் வெறும் மாற்றத்தை நாடாமல், அடிப்படை கட்டமைப்பில் மாற்றம் காண வேண்டும் என்பதையே பாரதிதாசனின் இந்த முழக்கம் உணர்த்துகிறது.
புதிய உலகை படைக்கும் வழிகள்
பாரதிதாசனின் கனவான ஒரு புதுமையான சமத்துவமான பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பது ஒரே நாளில் நடந்து விடும் மந்திரம் அல்ல. அது ஒவ்வொரு தனி மனித பங்களிப்பின் கூட்டு முயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தன்னலமற்ற தொடர்ச்சியான செயல்முறையாகும் . அதற்கு ஒவ்வொரு குடிமகனும் , அரசும் கீழ் கண்டவற்றை செயல்படுத்த முன் வரவேண்டும்.
கல்வி மற்றும் விழிப்புணர்வு
அறியாமை தான் பல சமூகப் பிரச்சனைகளுக்கு காரணம். அடிப்படை தரமான தாய் மொழிக்கல்வி அனைவருக்கும் கிட்டுவதை உறுதி செய்வதன் மூலம், நாம் சிந்திக்கும் திறனையும், நமது அறிவாற்றலையும் , நமது திறமையையும் வளர்த்துக் கொள்ள முடியும் .தரமான கல்வி ஒரு புதிய அறிவார்ந்த சமூகத்திற்கான அடித்தளம் . பிற்போக்குத்தனமான சமூக அமைப்பை தகர்த்து ,புதிய முற்போக்கு சிந்தனைகளை கொண்ட புதிய உலகத்தை படைக்க வேண்டும். குறிப்பாக ஜாதி, மத, இனத்தின் மீது கொண்ட பற்றினை நீக்கி, ,அறிவியல் பூர்வமான சிந்தனைகளை வளர்க்கக் கூடிய , விழிப்புணர்வோடு கூடிய சிறந்த கல்வி முறை வேண்டும்.
சமூக நீதி மற்றும் சமத்துவம்
ஜாதி, மதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாகுபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் முற்றிலும் கலைந்து ,அனைவருக்கும் சம வாய்ப்புகளும் ,உரிமைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் . இது ஒரு வலுவான மற்றும் ஒற்றுமையான சமூகத்தினை உருவாக்கும் . இன்றும் அரசாங்கத்தின் முக்கியமான பதவிகளிலும், நீதித்துறையில் உயர் பதவிகளிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பெரும்பான்மை வகிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். உழைப்பின் உயர்வினை ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து உழைத்து முன்னேற வேண்டும். குறிப்பிட்ட ஜாதியினர் குறிப்பிட்ட தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலை அடியோடு தகர்த்து எறியப்பட வேண்டும். அன்பே சிவம் என்ற தாரக மந்திரம் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் குடியேற வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் சமமான வேலை வாய்ப்புகள் எல்லாத் துறைகளிலும் வழங்கப்பட வேண்டும்.
பொதுவுடமை சமுதாயம்
எல்லோருக்கும் எல்லாம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை கொண்ட சமுதாயம் வேண்டும். சொத்துகள் ஒரு சிலரிடம் மட்டும் குவிந்து கிடக்கும் நிலை மாறி, உழைப்பிற்கேற்ப அனைவருக்கும் சமமாக கிடைக்க வகை செய்யக்கூடிய ஒரு புதிய உலகம் உருவாக வேண்டும். கடை கோடி மனிதனுக்கும் நன்கு வாழும் உரிமை கிடைக்க வேண்டும். அனைத்து மக்களும் ஒற்றுமையோடும், சகோதரத்துவத்தோடும், அனைவரும் சமம் என வாழும் நிலை வர வேண்டும்.
சுற்றுச்சூழலை பாதுகாத்தல்
இயற்கையோடு இணக்கமாக வாழ்வது புதிய உலகின் முக்கிய அம்சமாகும். நீர் வளத்தை பாதுகாத்தல் , மண் வளத்தை காத்தல், காற்று மண்டல தூய்மை, நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்தல் போன்ற செயல்கள் மூலம் ,புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தி ,இயற்கையை சமநிலையில் பாதுகாக்க வேண்டும். நெகிழி இல்லா புதிய உலகம் படைத்து, வருங்கால சந்ததிகளுக்கு… நல்ல பூமியையும், தூய காற்றினையும், மாசற்ற தண்ணீரையும் கொண்ட புதிய நல்ல உலகத்தை கொடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பால் பல அறிய பறவைகளும் விலங்கினங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. அவைகளும் வாழக்கூடிய நல்ல இயற்கை சூழலை அமைத்துக் கொடுக்க ஆவன செய்ய வேண்டும்.
பெண் விடுதலை
ஆண்டாண்டு காலமாய் ஆணும் பெண்ணும் சமம் என பாரதியார் முதல் பாரதிதாசன், பெரியார் வரை பேசிக் கொண்டிருந்தாலும் உண்மையில் இன்னும் ஆணும் பெண்ணும் சமமாக பார்க்கப்படவில்லை. நகர்ப்புறங்களில் ஆணுக்கு சமமாய் பெண்ணும், சம்பாதிக்க வேண்டும் என நினைத்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இரட்டிப்பு வேலை பளு. அலுவலகத்தையும் கவனித்து வீட்டினையும் கவனித்து, இருதலைக்கொல்லியாய் பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்களை வேலைக்குச் செல்ல அனுமதித்த ஆண்கள் , வீட்டு வேலையை பகிர்ந்து கொள்வதில்லை. வீட்டில் எதையும் முடிவெடுக்கும் அதிகாரம் இன்னும் பெண்களுக்கு முழுமையாய் அங்கீகரிக்கப்படவில்லை.
குடும்பத்தின் கட்டுக்கோப்பான நிலை மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் பெண்கள் தங்களின் தனித்திறமைகளை குழிதோண்டி புதைத்து, தனது நியாயமான ஆசைகளை, விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் ,இன்றும் மனதிற்குள் வெதும்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலோட்டமாய் பெண்கள் சுதந்திரமாய் இருப்பது போல் தோன்றினாலும், குடும்பத்திற்குள் அவர்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகள் அதிகமே. சமுதாயத்திலும் இந்த நிலை நீடிக்கவே செய்கிறது. திரைப்படங்களில் இன்னும் ஆணுக்கு முழு ஆடை, பெண்ணுக்கு அரைகுறை ஆடை என்ற விதியையே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வெறும் போகப் பொருளாகவும் காட்சி பொருளாகவும் பார்க்கப்படுகிறார்கள் என்பதற்கு இதுவே ஒரு நல்ல உதாரணம். இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். இலக்கியத் துறையில் சாதிக்க, ஏன் மேடை ஏறி பேசுவதற்கு கூட ,எத்தனை ஆண்கள், பெண்களை மகிழ்வோடு அனுப்பி வைக்கிறார்கள்? பெண்கள் தனது ஆற்றலை வெளிப்படுத்த போராட வேண்டிய நிலையே இன்றும் நிலவுகிறது.
எத்தனையோ சட்டங்கள் இருந்தும், இன்றும் , பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் ,கூட்டு பாலியல், குழந்தைகளுக்கு பாலியல் கொடுமைகள் என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. இதிலிருந்து தெரிகிறது ஆணாதிக்க சமுதாயம் இன்னும் மாறவில்லை என்பதும் ,பெண்களுக்கான சமூக உரிமைகள், பாதுகாப்பு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பதும் உறுதியாகிறது. இவை எல்லாம் அற்ற ஒரு புதிய நல்லுலகு விரைவில் மலர வேண்டும்.
கிராமப்புறங்களில் இன்றும், குடித்துவிட்டு வந்து, வீட்டுப் பெண்களை அடித்து , அவர்களின் மனதை புண்படுத்தும் வழக்கம் இன்றும் நிலவுகிறது. பெண்களுக்கு சம உரிமை வழங்குதல் என்பது ஏட்டில் இருந்தால் போதாது. சட்ட திருத்தங்கள் இருந்தால் போதாது. அவை வாழ்க்கை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் . ஒவ்வொரு ஆணும் பெண்மையை மதிக்க கற்றுக்கொண்டு, ஆண் பெண் சமமான உலகை கட்டமைக்க, முன் வர வேண்டும். ஒருவொருக்கொருவர் புரிதலுடன் வாழும் நல்ல குடும்ப சூழ்நிலை உருவாக வேண்டும். அதுவே அமைதியான உலகிற்கு வழிவகுக்கும்.
தொழில்நுட்பத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடு.
செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம் போன்ற நவீன கண்டுபிடிப்புகளை மனித குலத்தில் நன்மைக்காக பயன்படுத்த வேண்டும் . மருத்துவம் வியாபாரமாய் மாறிக் கொண்டு வருகிறது. மருத்துவத்தில் புதிய தீர்வுகள், விவசாயத்தில் மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த கல்வி போன்ற துறைகளில் ,தொழில்நுட்பம் ஒரு வரப் பிரசாதமாக அமைய வேண்டும்.. தொழில்நுட்ப வளர்ச்சியை சிறந்த முறையில் ஆக்கபூர்வமாய் பயன்படுத்தி, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் முன்னேற, ஒவ்வொரு குடிமக்களும் ஆயத்தமாய் இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைத்துவம்.
சிறந்த தலைவர்கள் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய , நல்ல கொள்கைகளை வகுத்து, மக்களை நல்ல உழைப்பாளிகளாய் மாற்றி, வேலைவாய்ப்புகளை பெருகி, ஒரு நல்ல இலக்கை நோக்கி, வழிநடத்த வேண்டும் . இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ஒரு சுபிட்சமான நல்ல புதிய உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் தனது பொறுப்பை உணர்ந்து ,சமூக மாற்றத்திற்காக பங்களிக்க வேண்டும் நமது அரசு, தொண்டு நிறுவனங்கள் ,தனிநபர்கள் அனைவரும் கைகோர்த்து செயல்பட்டு புதிய நல்லுலகை படைப்போம்.
ஒரு புதிய உலகை உருவாக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .நமது நற்சிந்தனைகள் மூலம் , நேர்மறையான செயல்களில் ஈடுபடும் போது ,பாரதிதாசன் கண்ட புதிய உலகம் நிச்சயம் சாத்தியமாகும் . புதியதோர் உலகு செய்வோம்" என்பது வெறும் கனவு மட்டுமல்ல; அது நாம் அடைய வேண்டிய இலக்கு. இன்று நிலவும் ஏற்றத்தாழ்வுகளை வேரறுத்து, பொதுவுடைமை, அன்பு, சமத்துவம், பெண்களுக்கு சம உரிமை, அவர்களின் உணர்வுகளை மதித்தல் , பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற உயரிய விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட, ஒரு புதிய உலகை உருவாக்க , நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். பாரதிதாசனின் இந்த கனவினை நனவாக்குவோம்.
கட்டுரையாளர் இரா. கலைச்செல்வியுடன் தொடர்பு கொள்ள: rksindira@gmail.com
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).