CSK-விலிருந்து அஸ்வின் வெளியேறப் போகிறாரா.. சஞ்சு சாம்சன் உள்ளே நுழையப் போகிறாரா?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆர். அஸ்வின் வெளியேறப் போவதாகவும், சஞ்சு சாம்சன் உள்ளே வரப் போவதாகவும் ஒரு சூடான பேச்சு ஓடிக் கொண்டிருககிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 சீசனுக்கான திட்டங்களை அணிகள் இறுதி செய்ய இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், வீரர்கள் பரிமாற்றம் மற்றும் வெளியேற்றம் குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், அந்த அணியிலிருந்து வெளியேறப் போவதாகவும், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.
அதேபோல நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்குத் திரும்பிய அனுபவ வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், அவரை விடுவிக்குமாறு அணி நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக ஒரு சமூக வலைதளப் பதிவு தற்போது கூறுகிறது. கடந்த ஆண்டு அஸ்வின் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், தனது கிரிக்கெட் வாழ்க்கையை அந்த அணியில்தான் அவர் தொடங்கினார். ஆனால், அஸ்வினின் இந்தத் 'தாய் வீடு' பயணம் ஒரே ஒரு சீசனுடன் முடிவுக்கு வரலாம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் 2025 சீசனில் அஸ்வின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக 9 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இந்த சுமாரான ஆட்டத்தால், அவர் பல போட்டிகளில் மாற்று வீரராக அமரவைக்கப்பட்டார்.
ஒருவேளை சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறினால், அவர் சிஎஸ்கே அணிக்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார். விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் இருக்கும் சாம்சன், 2026 சீசனுக்கு முன், தோனி ஓய்வுபெறும் பட்சத்தில், அவரது இடத்தை நிரப்பக்கூடிய மிகச் சிறந்த வீரராகவும் கருதப்படுகிறார்.
அதேபோல், அஸ்வின் ராஜஸ்தான் அணிக்கு விளையாடியபோது சிறப்பான பங்களிப்பை அளித்தவர். எனவே, அவர் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்படக் கூடும். அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இரு வீரர்களின் பரிமாற்றம், ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரண்டு அணிகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.