ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

Su.tha Arivalagan
Nov 20, 2026,10:34 AM IST

- ஆர். பிருந்தா


“கமலாக்கா, கமலாக்கா” என்று கூப்பிட்டுக் கொண்டே வந்தாள் பக்கத்து வீட்டுப் பானு.


உள்ளே வந்தவள், “என்ன அக்கா, சாப்பிட்டாச்சு, ஹாய்யா ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆட ஆரம்பிச்சுட்டீங்க; இதுல அப்படி என்னக்கா இருக்கு ஸ்பெஷலா?” என்று கேட்டாள்.


“அப்படிக் கேளு பானு! இதுல உட்கார்ந்து ஆடற சுகமே தனி தான் போ; அந்தக் காலத்துல எல்லோர் வீடுகளிலும் நடு ஹால்ல பித்தளை சங்கிலியுடன் கூடிய ஊஞ்சல் மாட்டி இருப்பார்கள். அதில் உட்கார்ந்து ஆடுவது எல்லோருக்கும் (வயது வித்தியாசம், ஆண், பெண் பாகுபாடு இல்லாமல்) பிடிக்கும். அப்போ காரணம் எல்லாம் தெரியாது. தம்பி, தங்கைகளுடன் சண்டை போட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து, அதிலும் வேகமாக ஆடுவது ரொம்பவும் பிடிக்கும்.”


“சரிக்கா, வீட்டுல ஊஞ்சல் இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க?”


“வீட்டுல ஊஞ்சல் இல்லாதவங்க ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டிப் பெண்கள் ஆடுவார்கள். இப்போது அது எல்லாம் மறைந்தே போய் விட்டது. எல்லோரும் அலைபேசியை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள்.”


“ரொம்பவும் சரி தான் அக்கா நீங்க சொல்றது; மேலே சொல்லுங்க.”


“ஊஞ்சல் ஆடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்ல, மன ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதனால் தான் எல்லோர் வீடுகளிலும் கட்டாயம் ஊஞ்சல் அமைத்தார்கள். இப்போது இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.”




“கோவில்களில் கூடக் கடவுளை ஊஞ்சலில் வைத்துப் பிரத்யேக வழிபாடுகள் செய்வார்கள். நீ பார்த்து இருப்பியே? ஏனென்றால் ஊஞ்சல் ஆடுவது இறைவனுக்குக் கூட மகிழ்ச்சி அளிக்கும் என்பதால் தான் செய்கிறார்கள்.  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டுவார்கள். நாமும் அந்தக் கயிறைப் பிடித்து ஆட்டி விடலாம்.


“ஊஞ்சலில் ஆடும் போது நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் போய் நேர்மறை எண்ணங்கள் உருவாகின்றன. இதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்போது நாம் எதிர்காலத்திற்கு எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை எடுக்கலாம். நமது இந்து திருமணங்களில் 'ஊஞ்சல்' என்ற ஒரு சம்பிரதாயம் இதன் அடிப்படையில் தான் நடத்தப்படுகிறது.


நாம் ஊஞ்சல் ஆடும் போது நேராக உட்கார்ந்து, கைகளை மேலே உயர்த்தி, இரண்டு பக்கமும் உள்ள சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு வேகமாக ஆடுவோம்.அப்போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் நன்றாகப் பாய்வதால் மூளை சுறுசுறுப்பு அடைகிறது. இது ஒரு நல்ல பயிற்சி. நாமும் சுறுசுறுப்பாக ஆகி விடுவோம்.


இன்று நிறையப் பேர் கணினி முன் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்கிறார்கள். அவர்கள் கழுத்து வலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் இந்த ஊஞ்சல் பயிற்சியைத் தினமும் ஓர் அரை மணி நேரம் செய்தால் போதும். இந்தப் பிரச்னையில் இருந்து விடுபடலாம்.”


“ஓ, அப்படியா அக்கா, இவ்வளவு பலன் இருக்கா? என் பொண்ணு கூட வேலைக்குப் போயிட்டு வந்துட்டு, கழுத்து வலின்னு சொல்லிட்டு இருக்கா; எங்க வீட்டுலயும் ஊஞ்சல் வாங்கி மாட்டச் சொல்லலாமே?”


“நமக்கு இடவசதி இருந்தால் தோட்டத்தில் ஊஞ்சல் அமைத்து ஆடலாம்.  அங்கு உள்ள மரம், செடி, கொடிகளில் இருந்து வரும் பிராணவாயு வேகமாக நம் உடல் முழுதும் பரவி ரத்தத்தைச் சுத்திகரிக்கும். இதனால் இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும்.


ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும். இப்படித் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு இதய நோய் வராது.


தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டவுடன் அரை மணி நேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவார்கள். இதனால் நாம் சாப்பிட்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்.


கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். நாம் வெளியில் சென்று விட்டு வந்தவுடன் ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி  ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்றுப் புத்துணர்ச்சி ஏற்படும்.


சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.


“இது மட்டுமில்லை பானு, நம்ம சங்க இலக்கியத்துல கூட நம்ம ஊஞ்சல் பற்றிய செய்திகள் இடம் பெற்று இருக்கு தெரியுமா உனக்கு?”


“அப்படியா அக்கா, அப்படி என்ன சொல்லி இருக்காங்க அதுல?”


“அதுல நம்ம தமிழ் சமூகத்தின் வாழ்வியலையும், இயற்கையையும், காதல் உணர்வுகளையும் வெகு நுட்பமாச் சித்தரித்து இருக்காங்க. ‘ஊய்யாறு’ என்று ஊஞ்சலைப் பற்றிய செய்திகள் ஒரு சில பாடல்களில் வெளிப்படையாக வரும் காட்சியாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் பொருள் மிகவும் ஆழமானதாக இருக்கும்.


ஊஞ்சல் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது காதல் மனநிலை, இளமை, மகிழ்ச்சி, சமூக வளம் ஆகியவற்றின் உவமையை விளக்குகிறது.


‘ஊய்யாறு’ (ஊஞ்சல் ஆடுதல்) என்பது சங்க இலக்கியத்தில், ' ஆடுதல், கிளவி, மகிழ்ச்சி' போன்ற சொற்களோடு இணைந்து வருகின்றது.


இந்தச் சொல்லானது உள்ளங்கையின் அசைவு, காதல் அலை பாய்ச்சி, வெளிப்புற மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது.


இலக்கியச் சான்றுகள்:


1. அகநானூறு - காதல் பாவனை:


பாடல் - 86:


“ஊய்யாறு தோழி, அன்னையர் அறியார்;

வாய்துயர் மறைய, நம் காதில் நின்றதே.”


உரை:  தோழியுடன் ஊஞ்சலில் ஆடும் பெண் தன் காதலைத் தாயிடம் மறைக்கிறாள்.

அர்த்தம்: ஊஞ்சல் - இரகசியமான காதல் மனநிலை.


பாடல் - 136:


“ஊய்யாற்று மங்கையர் போல,

எண்ணங் கொள் கிளவி நின்றதே.”


உரை: 


ஊஞ்சலில் ஆடும் பெண்களைப் போல, மனம் இடைவிடாது அசைகிறது.


அர்த்தம்:


ஊஞ்சல் - காதலின் உள்நிலை அலை பாய்ச்சி


பாடல் - 164:


காதலின் இனிய சொற்கள், ஊஞ்சலின் அசைவைப் போல மனதில் நின்று ஒலிக்கின்றன.


அர்த்தம்:


ஊஞ்சல் - நினைவின் மீள் பிறப்பும், துயரத்துடனான இனிமையும்


நற்றிணை: (இளமை மகிழ்ச்சி)


பாடல் 72:


தோழியுடன் ஊஞ்சல் ஆடும் பெண், வெளிப்படையான மகிழ்ச்சி இருந்தாலும், உள்ளுக்குள் காதலரின் நினைவு கலக்கமாகக் கிடக்கிறது.


அர்த்தம்:


ஊஞ்சல் - இளமை உணர்ச்சியின் உவமை


பெரும்பாணாற்றுப்படை:


சமூக வளம்:


பாடல் வரி:


“ஆயமர் ஊய்யாறு ஆடும்

அரும் பெருங்காடு,

மங்கையர் மகிழ்ந்தாடும் 

மணிநகர் மேல்”


உரை:


வளமான நகரில் இளம் பெண்கள் ஊஞ்சலாடி மகிழ்கின்றனர்.


அர்த்தம்:


ஊஞ்சல் - செழிப்பு, வளமை, சமூக அமைதியின் சின்னம்.


புராணங்கள் மற்றும் கிரந்தங்களில் ஊஞ்சல் பெரும்பாலும் ஆன்மீகம், திருவிழா, பக்தி வழிபாடு ஆகியவற்றோடு தொடர்பு படுத்தப்படுகிறது.


கிருஷ்ணர் -  ஊஞ்சல்:


பாகவத புராணம், ஹரி வம்சம் போன்ற நூல்களில் கிருஷ்ணர் - ராதை - கோபிகைகள் ஊஞ்சலில் ஆடுவது முக்கியக் காட்சி. இதுவே பின்னாளில் ' ஜுலா ஜாத்ரா' என்ற வைஷ்ணவத் திருவிழாவாக உருவானது.


வட இந்தியாவில் இன்று வரை கிருஷ்ணருக்கு ஊஞ்சல் ஆட்டுதல் ஒரு சிறப்பு வழிபாடாக இருக்கிறது.


மாகதிய புராணம் & தேவிகள்:


சில புராணங்களில் பார்வதி - சிவன், லக்ஷ்மி - விஷ்ணு ஆகிய தெய்வங்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவதாக வரும். இது இணைப்பு, வளம், ஆனந்தம் என்பதைக் குறிக்கிறது.


தென்னாட்டு வழிபாட்டு மரபுகள்:


ஆண்டாள் திருவிழா (திருப்பாவை, திருவிளையாடல் கதைகள்) ஆண்டாள் ஊஞ்சலில் ஆடி, கண்ணனை விரும்பினாள் என்று பல இடங்களில் சொல்லப்படுகிறது.


ஆடி மாதம் - 'ஆடிப்பெருக்கு ஊஞ்சல்‘ வழக்கம். திருமணமான பெண்கள் ஊஞ்சல் ஆடி வளம் வேண்டுவது புராணங்கள்  & நாட்டுப்புறக் கதை மரபுகள். ' ஆடி ஊஞ்சல்' பெரும்பாலும் அம்மன் வழிபாட்டோடு (மாரியம்மன், காளியம்மன்) தொடர்புடையது ஆகும்.”


“அடேங்கப்பா, இந்த ஒரு ஊஞ்சலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா அக்கா?”


“முன்பு எல்லாம் நம் இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப் பொருட்களில் ஊஞ்சலும் ஒன்றாக இருந்தது. இப்போது இடப்பற்றாக்குறை காரணமாகப் போடுவது இல்லை.”


“நீங்க சொன்னதைக் கேட்டவுடன் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக ஊஞ்சல் இருக்க வேண்டும் அக்கா.”


“ஆமாம் பானு, நீ சொல்றது நூற்றுக்கு நூறு சரி.”


“சரிக்கா, நான் வர்றேன்.”


(ஆர்.பிருந்தா எம்.ஏ., எம்.பில். கடந்த 30 வருடங்களுக்கும் மேலாகப் பல கட்டுரைகள் பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். எளிமையான, மெல்லிய எழுத்திற்குச் சொந்தக்காரர். மாஸ்டர் ரெய்கி ஹீலர். இது வரை ஏனையோருடன் சேர்ந்து 40 புத்தகங்களுக்கு மேலும், மூன்று சிறுகதைத் தொகுப்புகளும், ஒரு நாவலும் எழுதி உள்ளார்)