அன்பு எதையும் தாங்குமா?
- இர. இந்திராணி, பூத்தாம்பட்டி, திண்டுக்கல்
இராமுவும் மதியும் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியர். திருமணமாகி ஆறு ஆண்டுகள் கழித்து அவர்களின் செல்ல மகள் மதுஸ்ரீ பிறந்தாள். நேர்மையான மேலாளரான இராமுவை நிறுவனத்திற்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
அலுவலகம் முடிந்ததும் வீடு; இரவில் மகளுடன் சிறிது நேரம் விளையாடுவது; பின் காலையில் அலுவலகம் சென்று விடுவது என்பதே இராமுவின் அன்றாட செயலானது.
மதியோ காலையில் எழுந்ததும் வாசல் தெளித்துக் கோலமிட்டு, காலை மற்றும் மதிய உணவு தயாரிக்க ஆயத்தமாகி விடுவாள். கணவனுக்குக் காலை உணவைப் பரிமாறிக் கொண்டே, மதுஸ்ரீ பள்ளிக்குச் செல்லத் தேவையானவற்றை எடுத்து வைப்பாள்; மகளுக்கு மதிய உணவை டப்பாவில் அடைத்து தண்ணீர் பாட்டிலுடன் சிற்றுண்டியையும் தயார் செய்து உணவுப்பையில் வைத்து விடுவாள். இராமு அலுவலகம் சென்றபின்,மகளை அழைத்துக் கொண்டு மாடியிலிருந்து இறங்கி வந்து பள்ளி வாகனத்தில் ஏற்றி விடத் தயாராவாள் மதி. இதுவே இவர்களின் வாடிக்கையானது.
மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் மதுஸ்ரீ குளித்துவிட்டு வீட்டுப்பாடத்தை முடிக்க ஆயத்தமாவாள். சகமாணவர்களுடன் அதிகம் பழக மாட்டாள். தனித்தே இருப்பாள்; ஆனால் பாடங்களை நன்கு கவனிப்பாள்; படிப்பில் படு சுட்டி அவள்.
வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு அம்மாவுடன் பேசி மகிழ்வாள் மதுஸ்ரீ. பள்ளியில் நடந்தனவற்றை அம்மாவிடம் பகிர்ந்து கொள்வாள். பின் சிறிது நேரம் ஓவியம் வரைவாள்; சிறிது நேரம் களிமண் உருவங்கள் செய்து விளையாடுவாள். அருகில் உள்ள சிறுவர் சிறுமிகளுடன் தெருவிற்குச் சென்று விளையாட மாட்டாள். ஏனெனில் மதி அச்செயலை அனுமதித்ததே இல்லை.
தானாகவே விளையாடிப் பழக்கப்பட்ட மதுஸ்ரீ, ஓவியம் வரைதலிலும் களிமண் பொம்மைகள் செய்வதிலும் கற்பனை கதைகள் எழுதுவதிலும் தேர்ந்தவளானாள்.
இராமுவிற்கு ஆறிலக்கச் சம்பளம் கிடைத்ததால் மூவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர். எந்த உறவுகளையும் பேணப் பழகவும் இல்லை. வாரம் ஒரு முறை இராமு, பக்கத்து கிராமத்தில் உள்ள தன் பெற்றோரைப் பார்த்து வருவான். எப்பொழுதாவது தான் மகளையும் மனைவியையும் உடனழைத்து வருவான். இராமு குடும்பத்தினருடன் பெற்றோரைப் பார்க்க வருகையில், அவனது அண்ணன் குடும்பத்தாரை எதேச்சையாகச் சந்திக்க நேர்ந்தால் நலம் விசாரிப்பான் புன்சிரிப்புடன்.
மதுஸ்ரீயை அழைத்து, பெரியப்பா பெரியம்மாவிடம் பேசச் சொல்லிக் கூறுவான். மதுஸ்ரீயும் "நல்லா இருக்கீங்களா? " எனக் கேட்பாள். அவ்வளவுதான். உறவு சொல்லிக் கூட அழைக்க மாட்டாள். ஏனென்றால் அவள் அப்படி பழக்கப்படவில்லை.
மதுஸ்ரீ ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது ராமுவிற்கு உடல்நலம் குன்றி விட்டது. இதயக்கோளாறின் காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டான். இராமுவின் அண்ணன் குடும்பத்தார் அக்கறையுடன் கவனித்துக் கொண்டனர்.
இராமுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஆயத்தமான போதும்...மதி அவனைப் பார்த்து ஆறுதல் சொல்லவில்லை. இதைக்கண்ட அண்ணன் குடும்பத்தாருக்கு கடும் அதிர்ச்சி. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் இவ்வளவு நெருக்கடியான சூழலில் கூட ஒருவரை ஒருவர் பார்க்கவுமில்லை; பார்வை பரிமாறவுமில்லை என்பதே அதன் காரணம்.
சிகிச்சை பலனின்றி இராமு மருத்துவமனையிலேயே இறந்து விட்டான். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் இராமுவின் இறுதிப் பயணத்தில், அவசர ஊர்தியில் இராமுவோடு மகளும் அண்ணன் குடும்பத்தாரும் மதுஸ்ரீயின் மாமனும் பயணித்தனர். மதி...உடன்வர மறுத்துவிட்டாள். அவ்வளவு இறுகிப் போயிருந்தது அவள் மனம்.
வீட்டிற்கு வரும் வரை அப்பாவுடன் பேசிக்கொண்டே வந்தாள் மதுஸ்ரீ. "ஏன் அப்பா பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் அழுது கொண்டிருப்பது உங்கள் காதில் விழவில்லையா? நான் அழுதால் தாங்க மாட்டீர்களே! ஏன் அமைதியாக உறங்குகிறீர்கள்? நான் இனிமேல் எதற்கும் அடம் பிடிக்க மாட்டேன் அப்பா. நீங்கள் மட்டும் எழுந்து வாருங்கள். நீங்கள் இல்லாமல் நான் எப்படியப்பா இருப்பேன்? " எனச் சொல்லிச் சொல்லி அழுதாள். மதுஸ்ரீயின் அழுகையில் அனைவரும் கரைந்து அழுதனர். இப்படி எல்லாம் பேசுவாளா, மது? என்பது ஒரு புறமும் ராமுவின் இழப்பும் தொண்டையை அடைத்தது.
பின் வந்த காரில் மதி வந்து சேர்ந்தாள். இறுதிச் சடங்கு சிறப்பாய் முடிந்தது. உழைத்துச் சம்பாதிப்பதில் கவனமாய் இருந்த ராமு உறங்கிப் போனான்.. உடல் நலம் பேணாமல். தன்னோடு நேரத்தைச் செலவிடாத காதல் கணவனின் நினைவில், மனதில் வெறுப்பையும் வெறுமையையும் சுமந்து கொண்டு மதுஸ்ரீக்காக மதி இப்பூவுலகில் நடமாடுகிறாள். தானும் இராமுவுடன் நேரத்தைச் செலவிடாமல் சண்டையிட்டுக் கொண்டே வாழ்ந்துவிட்டோமே...என்று அனுதினமும் தவித்துக் கொண்டே...!
காலம் கடந்த விட்டுக்கொடுத்தல் பயனளிக்குமா?
(எழுத்தாளர் இர. இந்திராணி, பூத்தாம்பட்டி. திண்டுக்கல் மாவட்டம். இடைநிலை ஆசிரியர். ஆண்டிபட்டி ஊ.ஒ.தொ.பள்ளி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 22 வருடங்கள் ஆசிரியர் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார்)