Cute Story: காகம் எனும் அழகி.. சிறார்களுக்கான கதை!
- ராதா ஜானகிராம், வீரசிகாமணி
ஒரு நந்தவனத்தில் அழகிய மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கின. அங்குச் சிட்டுக்குருவி, பச்சைக் கிளி மற்றும் குயில்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.
ஒரு நாள் —
அவ்வழியே பறந்து வந்தது காகம். நந்தவனத்தின் அழகைப் பார்த்து வியந்தது.
குயிலின், 'குக்கூ...' என்ற இனிய குரலும், பச்சைக் கிளிகளின், 'கீச்... கீச்...' என்ற அழகிய ஓசையும், சிங்காரமாகப் பறந்து திரியும் சிட்டுக்குருவிகளின் சுறுசுறுப்பும் அதைக் கவர்ந்தன.
சிட்டுக்குருவியிடம், "நானும் ஒரு மரத்தில் கூடு கட்டிக் கொள்கிறேன்; என்னையும் உங்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்," எனக் கேட்டது காகம்.
"உனக்கு அழகிய குரல் வளம் இல்லை. உன் குரலைக் கேட்கவே அருவருப்பாக உள்ளது. உன்னை ஏற்க முடியாது," எனக் கூறி நகைத்தது சிட்டுக்குருவி.
அடுத்த மரத்திலிருந்த பச்சைக் கிளியிடம் தன் ஆசையைத் தெரிவித்தது காகம்.
தாமதிக்காமல், "என் அழகுக்கு ஈடு யாரும் இல்லை!" எனக் கூறி விரட்டியது கிளி.
அடுத்துக் குயிலிடம் வந்தது காகம்.
மிக வருத்தத்துடன், "நண்பரே... நானும் உங்களை போன்ற பறவை இனம்தான். ஆனால், இந்த நந்தவனத்தில் வாழச் சிட்டுக்குருவியும் பச்சைக் கிளியும் மறுக்கின்றன. உங்களால் உதவ முடியுமா?" எனப் பரிதாபமாகக் கேட்டது.
ஏளனமாக நகைத்தபடி, "எங்களோடு சேர்ந்து வாழ நீ ஆசைப்படுவது வியப்பாக உள்ளது. என் இனிய குரலுக்கு இந்த உலகமே அடிமை! உன் குரலை நினைத்துப் பார்... உடனே ஓடி விடு!" என கோபம் பொங்கக் கூறியது குயில்.
மிகுந்த கவலையுடன் பறந்து சென்றது காகம்.
சற்று நேரத்தில், நந்தவனத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. குயில், சிட்டுக்குருவி, பச்சைக் கிளிகள் அனைத்தும் அலறின.
இதைக் கேட்டு, 'ஏதோ ஆபத்து நிகழ்ந்திருக்கிறது' என எண்ணியபடி நந்தவனத்திற்குள் விரைந்தது காகம்.
நினைத்தது போலவே, சில பாம்புகள் மரங்களைச் சுற்றி வந்தன. கூட்டிலிருந்த முட்டைகளை விழுங்க முயன்றன.
அதைக் கண்ட காகம், தன் சிறகுகளை வேகமாக அசைத்துப் பலமாகக் குரல் எழுப்பியது. உடனே, நந்தவனத்தைக் காக்கை கூட்டம் முற்றுகையிட்டது. சில நிமிட போராட்டத்திற்குப் பின், பாம்புகளை விரட்டியடித்தன காக்கைகள்.
காகத்தின் வலிமையையும் நற்குணத்தையும் அறிந்த பறவைகள், " எங்களை மன்னித்து விடு நண்பா... ஆபத்தில் உதவுவதுதான் உண்மையான அழகு என்பதை நிரூபித்து விட்டாய்! உன்னை நண்பனாக அடைவதற்குப் பெரும் தவம் செய்திருக்க வேண்டும்... எங்களோடு இங்கேயே தங்கி விடு," எனக் கூறின.
மகிழ்ச்சியில் துள்ளியது காகம்.
குழந்தைகளே... வெளிப்புற அழகு உண்மையான அழகல்ல; ஆபத்து காலத்தில் உதவுவதே உண்மையான அழகாகும்!
(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)