அரசியலுக்கு வருகிறேன்.. ராகவா லாரன்ஸ் அறிவிப்பு.. தவெகவா.. அண்ணாமலையா?
சென்னை: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தான் மிகவும் நம்பும் ஒருவருக்குத் துணையாக அரசியலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நம்பும் அந்தத் தலைவர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் அவரது வீடியோ உரை மூலம் தெரிய வரும்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றோ, ஏதேனும் ஒரு பதவியைப் பெற வேண்டும் என்றோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை. நான் முழுமையாக நம்புகிற, எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால், அவருக்குப் பக்கபலமாக நின்று, ஒரு தனிமனிதனாக நான் செய்து வரும் சேவைகளை விட இன்னும் பெரிய அளவில் சமுதாயத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது.
ஆனால் இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் களம் காண வேண்டிய ஒரு கட்டத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன.
இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோவில், அரசியல் பற்றிய எனது புரிதல், அது எப்படி என் வாழ்க்கைக்குள் வந்தது, அரசியலைப் பற்றிய என் தாயாரின் பார்வை மற்றும் எனது இந்தப் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான, சுவாரசியமான சம்பவங்கள் குறித்து எனது மனதின் ஆழத்திலிருந்து, முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.
இந்த வீடியோவை இறுதிவரை பார்த்து உங்களுடைய கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசிகளுடன் நான் எடுத்து வைக்கும் இந்த முக்கியமான அடிவைப்பிற்கு, உங்களுடைய ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை என்று அவர் தெரிவித்துள்ளார்.