தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Jan 13, 2026,05:38 PM IST

டில்லி : விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கு சென்சார் போர்டு சான்று வழங்க மறுத்த விவகாரத்தில் மத்திய அரசு தான் பின்னணியில் உள்ளது என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இன்று அக்கட்சியின் எம்.பி.,யான ராகுல் காந்தியும் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். 


ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்று வழங்குவதற்கு வாரிய உறுப்பினர்களில் ஒருவர் புகார் அளித்ததால் அந்த படத்திற்கு தற்போது வரை சென்சார் சான்று வழங்கப்படவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 15ம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளதாக சொல்லப்படுகிறது.




இதற்கிடையில், விஜய்க்கு நெருக்கடி கொடுத்து கூட்டணிக்கு வரவழைப்பதற்காக பாஜக., தான் ஜனநாயகன் படம் வெளியே வர விடாமல் முடக்கி வைத்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். விஜய் மற்றும் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததுடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆதரவு தெரிவித்து, மத்திய அரசை குற்றம்சாட்டினார்.


இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தனது எக்ஸ்தள பக்கத்தில், "‘ஜன நாயகன்’ படத்தை  தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும். திரு.மோடி அவர்களே, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது." என கருத்து பதிவிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசி வருவதால், தமிழக சட்டசபை தேர்தலில் தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என காங்கிரஸ் இப்போதும் விரும்புகிறதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.