ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில்.. ரவுடிகளின் வீடுகளில் ..போலீசார் அதிரடி சோதனை!
புதுச்சேரி: ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில் முக்கிய குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
சமீப காலமாகவே புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொலை, கொள்ளை, மிரட்டல், பழிவாங்கல் போன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்காக ரவுடிகள் ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் ஆயுதங்களின் புழக்கங்கள் அதிகரித்துள்ளது. இதனையடுத்து ரவுடிகளின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள முக்கிய குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதலே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஆப்ரேஷன் திரிசூலம் என்ற பெயரில் இந்த சோதனையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
மேலும் ரவுடிகளின் வீடுகளில் ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்தின் பேரில் 30 க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.