பெங்களூருவில் மீண்டும் மழை... மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்!

Meenakshi
May 20, 2025,06:49 PM IST

பெங்களூரு: பெங்களூருவில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.


கர்நாடகவின்  தலைநகரான பெங்களூருவில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 18ம் தேதி இரவு தொடங்கிய கனமழை அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சிவாஜிநகர், ஹென்னூர், கிருஷ்ணராஜாபுரம், கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக கெங்கேரியில் 132 மிமீ மழையும், ஹஎச்.ஏ.எல்.மாரத்தஹள்ளி, ஹென்னூர் உட்பட 10த்திற்கும் மேற்பட்ட இடங்களில் 100 மிமீ மழை பதிவானது. கம்மனஹள்ளி, இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில்  70 மிமீ மழை பதிவாகியது.




சில்க் போர்ட், சாந்தி நகர், எலஹங்கா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததினால் மக்கள் செய்வது அறியாமல் தவித்தனர். கனமழை காரணமாக ஆங்காங்கே 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளில் சாய்ந்தன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது.


பெங்களூரு பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததினால், அங்குள்ள மக்களை மீட்பு குழுவினர் படகுகள் மூலம் மீட்டனர். மழை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முதல்வர் சித்தராமையா நேரில் பார்வையிட்டார். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டார்.


இந்நிலையில், பெங்களூரு வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு பெங்களூருவுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மிமீ முதல் அதிகபட்சமாக 115.5 மிமீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமுையாக பாதிக்கப்பட்டுள்ளது.