வெயிலுக்கு இதமான குல்பி.. தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

Manjula Devi
Apr 17, 2025,02:42 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கோடைகாலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பத்து வருடத்திற்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதில் பள்ளிக்கரணை நாராயணபுரம், வளசரவாக்கம், சாலிகிராமம், மடிப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது.

இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல் ஆவடி, மதுரவாயில், பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெக்கை தணிந்து குளுமையான சூழல் நிலவி வந்தது.




இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


சென்னை மழை: 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.