பெண்ணே நிமிர்ந்து பார்!
- சு. நாகராஜன்
நிமிர்ந்து பார்
ஆண்டாண்டு காலம்
அடிமைத்தன சங்கிலியில்
பிணைக்கப்பட்டு- அடுப்பூதும்
பெண்களுக்கு படிப்பதற்கு- என்று
எள்ளி நகைக்கப்பட்டு
கணவன் இறந்தால் மனைவியும்
உடலோடு சேர்த்து எரிக்கப்பட்டு
ஐயகோ! போதும்! போதும்!
தலை குனிந்து நடந்த
இப் பாரதத்தின் பெண்ணே
நிமிர்ந்து பார்
எள்ளி நகைத்தவர்கள்
கலங்கட்டும்
அடிமைப் படுத்த
நினைத்தவர்களின்
ஆணவம் ஒழியட்டும்
பதர் என நினைத்தவரின்
கண்ணை நன்றாக
உற்றுப் பார்! பார்! பார்!
நிமிர்ந்து பார்
பெண்ணென்று அறிந்து
கருவினிலே
கொல்லத் துணிந்த
கயவரிடம் சொல்
இங்கே விதை ஒன்று
செடியாகி
செடிக்கு மொட்டாகி
மொட்டிற்கு பூவாகி
பூவிற்கு மணமாகி
உன் முன்னே நிற்கிறது
நிமிர்ந்து பார்!
கடலுக்கு அணை
போட முடியுமா
காற்றுக்கு தடை
போட முடியுமா
எரிமலையை அடக்க
முடியுமா -இதற்கு
எதிர்வாதம் உன்னால்
கூற முடியுமா
சொல்! சொல்!
தடைகளை வைத்து பார்
தகர்த்தெறிவேன்
படைகளை திரட்டிப்பார்
பதராக்கி விடுவேன்
இடைநிற்கும் கல்வி
உனக்கு இழப்பல்லவோ
உணர்ந்து கொண்டால்- உன்
வாழ்வு பூந்தோட்டம் அல்லவோ
எதிர்காலம் மனதிலே
உதிக்க- உன்
எதிர்க்கும் தடைகளை
உடைத்தெறிய
நிமிர்ந்து பார்
ஏட்டை பிடிக்க
எனக்கு ஆசை- வரும்
மாட்டை பிடிக்க
எனக்கு ஒரு வேலை
அடிமையாய் பிறந்தது
நான் செய்த பாவமோ
என்றெண்ணி இருந்து விட்டால்
என் வாழ்வு செழிக்குமோ
தடைகளை தகர்த்தெறிந்திடு
நடை போடுவாய்
நாளைய தலைவராக
நிமிர்ந்து பார்
குடும்பத்தின் சூழ்நிலை
நோக்காதே -உன்
குலப்பெருமை எதுவென்று
இங்கே பாராதே
வழி ஒன்று இங்கே
இருக்கிறது- அதில்
தடை ஒன்று உன்னைக்
கண்டால்- விடை ஒன்று
சொல்லிட்டு வந்திடு- நான்
தடைகளை முன்னேறிச்
செல்கிறேன் என்று
நிமிர்ந்து பார்
பெற்றோரை
நினைவில் சுமந்து
கணவனை
இதயத்தில் சுமந்து
குழந்தையை
கருவில் சுமந்து
குடும்ப பாரத்தை
தலையில் சுமந்து
இதோ முன் செல்கிறாள்
நிமிர்ந்து பார்
விளையாட்டிலும் ஜெயிச்சாச்சு
மானிடனே நில்
ஆழ் கடலிலும்
முத்தெடுப்பேன்
கடல் அலையிலும்
குதித்தெழுவேன்
நிலவிலும்
கால் பதிப்பேன்
நிமிர்ந்து பார்
(சு நாகராஜன், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)