சென்னை சூப்பர் கிங்ஸை.. 13 ஓவர்களிலேயே நசுக்கி எடுத்து.. பெரும் வெற்றியைத் தட்டிய ராஜஸ்தான்
குவஹாத்தி: ஐபிஎல் 2026 தொடரின் 3-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜஸ்ட் 13 ஓவர்களிலேயே போட்டியை முடித்து அசத்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
குவஹாத்தியில் நடந்த இந்தப் போட்டியில் முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ராஜஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் ஜேமி ஓவர்டன் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். நட்சத்திர வீரர்கள் பலரும் சொதப்பி விட்டனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டார்.
ராஜஸ்தான் தரப்பில் நந்த்ரே பர்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
128 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு, 15 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி தொடக்கம் தந்தார். வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்த அவர், மொத்தம் 17 பந்துகளில் 52 ரன்கள் (5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசினார்.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 128 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடந்த வருட சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாகி ஆடியிருந்தது. இந்த வருடமும் அதே மோசமான பார்மில் அது தொடங்கியிருப்பது ரசிகர்களை பெரும் சோகத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு காலத்தில் எதிரணிகளைக் கதற விட்ட நம்ம சென்னையா இது என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். அடுத்து வரும் போட்டிகளில் சென்னை அதிரடி காட்டினால் நல்லது.