ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., தேமுதிக வேட்புமனு தாக்கல்!
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்காக அதிமுக மற்றும் திமுக சார்பில் நேற்று வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
இந்நிலையில் நேற்று அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. திமுக.,விற்கான 4 ராஜ்யசபா இடங்களுக்கு திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள இரண்டு இடங்களில் ஒன்றை கூட்டணி கட்சியான தேமுதிக.,விற்கு திமுக வழங்கி உள்ளது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மற்றொரு இடம் காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுகிறார்.
அதிமுக.,விற்கான 2 ராஜ்யசபா இடங்களில் ஒன்றை அதிமுக.,வும், மற்றொன்றை கூட்டணி கட்சியான பாமக.,விற்கும் அதிமுக தலைமை வழங்கி உள்ளது. அதிமுக சார்பில் தம்பிதுரையும், பாமக சார்பில் அன்புமணியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால் அதிமுக பொதுச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று தம்பிதுரையும், தலைமை செயலக அதிகாரிகள் முன்னிலையில் அன்புமணியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தேமுதிக சார்பில் சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மற்ற வேட்பாளர்களும் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.