ராஜ்யசபா தேர்தல் 2026.. திமுக, அதிமுக, காங்., பாமக, தேமுதிக வேட்பு மனுக்கள் ஏற்பு
சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்ட நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்த 5 கட்சிகளைச் சேர்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டன. இவர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதால் அனைவருமே போட்டியின்றி தேர்வாகவுள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 02ம் தேதியுடன் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று தான் அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் ஆகியோரும், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக தரப்பில் அன்புமணி ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தர். இவர்கள் தவிர பாமக நிறுவனர் ராமதாசின் உதவியாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட 6 பேர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிவு மற்றும் ஆதரவு இல்லாததால் சுவாமிநாதன் உள்ளிட்டோரின் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தவிர்த்து அதிகாரப்பூர்வ கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் பரிசீலனையின்போது ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதனால் 6 பேரும் எம்.பிக்களாக போட்டியின்றி தேர்வாகிறார்கள். இதில் தேமுதிக மட்டுமே முதல் முறையாக ராஜ்யசபாவுக்குப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் தமிழகத்தை சேர்ந்த 6 எம்.பி.,க்களும் விரைவில் பதவியேற்றுக் கொள்வார்கள். மற்ற மாநிலங்களிலும் காலியாக உள்ள ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தல்களும் நடந்து முடிந்த பிறகு, அடுத்து நடைபெறும் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது புதிய உறுப்பினர்கள் அனைவரும் முறைப்படி பதவியேற்றுக் கொள்வார்கள்.