ராஜ்யசபா எம்.பி ஆனார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்.. அதிமுக, திமுக வேட்பாளர்களும் வெற்றி!

Meenakshi
Jun 12, 2025,06:43 PM IST

சென்னை: மாநிலங்களவை  எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழகத்தில் உள்ள 18 ராஜ்யசபா  எம்பிகளின் பதவி காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, ராஜ்யசபாவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.ஜூன் 19ம் தேதி தேர்தல் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 02ம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.




இந்த தேர்தலுக்கு திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், கூட்டணி கட்சிகள் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பமனு தாக்கலுக்கான கால அவகாசம் ஜூன் 09ம் தேதியுடன் நிறைவடைந்தது. கட்சி சார்பிலும், சுயேட்சையாகவும் மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுக்களுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ம் தேதி காலை நடைபெற்றது.  


இந்நிலையில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், சுயேட்சை  வேட்பாளர்களின் அனைவரின் வேட்புமனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. வேட்பு மனு ஏற்கப்பட்ட 6 பேரை தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்ய வில்லை. இதன்காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் எம்பி., ஆகியுள்ளார். அதற்கான சான்றிதழையும் தற்போது பெற்றுள்ளார்.