கமல்ஹாசன் எம்.பி. ஆகிறார்.. தேமுதிகவுக்கு சீட் கிடைக்குமா?.. ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்

Su.tha Arivalagan
May 26, 2025,06:28 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 6 ராஜ்யசபா காலி இடங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 19ம் தேதி இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாட்டில் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த எம். சண்முகம், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன், ம.தி.மு.க. தலைவர் வைகோ, பா.ம.க.வை சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த என். சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் முடிவடைகின்றன. இதையடுத்து 6 இடங்கள் காலியாகியுள்ளன. அந்த இடங்களுக்குத்தான் தற்போது தேர்தல் நடைபெறவுள்ளது.


சட்டசபையில் உள்ள எம்.எம்.ஏக்கள் கணக்குப்படி திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்கும். அதிமுகவுக்கு 2 இடம் கிடைக்கும். இதில் திமுக சார்பில் மீண்டும் வைகோவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. அதேபோல திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு ஒரு சீட் தரப்படும் என்று  கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே 3 திமுக மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது.




மறுபக்கம் அதிமுக தரப்பில் 2 இடங்களிலும் அதிமுகவே போட்டியிட விரும்புகிறது. காரணம் அங்கு கடும் போட்டி நிலவுவதால். ஆனால் தங்களுக்கு ஒரு சீட் தர அதிமுக ஒப்புக் கொண்டிருப்பதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அதை அதிமுக மறுத்துள்ளது. இதனால் அங்கு குழப்பம் நிலவுகிறது. எனவே தேமுதிகவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 9-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 12-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். ஜூன் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். அன்று மாலையே 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.