ரக்ஷா பந்தன் 2025.. உடன்பிறப்புகளின் இனிய பந்தம்.. பாசப் பிணைப்பின் அடையாளம்!

Swarnalakshmi
Aug 08, 2025,10:19 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ரக்ஷா பந்தன் ஆகஸ்ட் 9, 2025 - ரத்த சம்பந்தம் உள்ள உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் உடன்பிறவா சகோதர சகோதரிகளுக்கும் இடையிலான உறவை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை "ரக்ஷா பந்தன்" அல்லது "ரக்ஷா பந்தனா" என்று அழைக்கப்படும் ராக்கி பண்டிகை ஆகும். உடன்பிறப்புகளுக்கு இடையிலான புனிதமான பந்தத்தையும், பிணைப்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


இது ஷ்ரவண  மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று (ஷ்ரவன பூர்ணிமா) இந்திய சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி கட்டுகிறார்கள் .அவர்கள் தங்களுடைய பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள் .அதற்கு பதில் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு வாழ்நாள் முழுவதும் ஆதரவையும் அன்பையும் உறுதி அளிக்கிறார்கள். "ரக்ஷா பந்தன்" என்றால் "பாதுகாப்பு பிணைப்பு" என்று பொருள் .இந்த பந்தம் உடன்பிறந்த ரத்த உறவினர்கள் மட்டுமல்ல சகோதர சகோதரிகளாக பாவிக்கும் அனைவரும் கொண்டாடி மகிழலாம்.


நேரம்: ரக்ஷா பந்தன் சனிக்கிழமை ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் நூல் விழா நேரம் காலை 6 :03 மணி முதல் பிற்பகல் 2 :54 மணி வரை. ரக்ஷா பந்தன் முகூர்த்த நேரம்: மதியம் 1:41 முதல் 2: 54 மணி வரை அமைந்துள்ளது.




ரக்ஷா பந்தன் சடங்குகள் யாதெனில் சகோதரிகள் அவர்களுடைய சகோதரர்களுக்காக ராக்கி, ரோலி ,சாதம் ,இனிப்புகள் மற்றும் ஒரு நெய் விளக்கு ஏற்றி ,ஒரு தட்டில் (தாலி) வைத்துக் கொள்வார்கள். பிறகு சகோதரி அவளுடைய சகோதரனின் வலது கை மணிக்கட்டில் ராக்கி கட்டி, குங்குமத்தினால் திலகமிட்டு ,தன் சகோதரனின் நீண்ட ஆயுளுக்கும் ,செல்வ செழிப்புக்கும் ,மனதாரப் பிரார்த்தனை செய்கிறார்கள் .அதற்கு சகோதரன் தன் சகோதரியை பாதுகாக்க உறுதி அளித்து அவர்களால்  இயன்ற  தங்கம், வெள்ளி, ஆடை, அணிகலன்கள் என தங்கள் சகோதரிகளுக்கு பிடித்தமான பரிசுகள் வழங்கி மகிழ்ச்சியாக குடும்பத்துடன் உணவு மற்றும் ஆசீர்வாதங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாக அனைவரும் கொண்டாடி மகிழ்வர். மேலும் தொலைவில் உள்ள சகோதரன், சகோதரிகள் கூரியர் மூலம் ராக்கி மற்றும் பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்கின்றனர்.


ரக்ஷா பந்தன் புராண காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணர் விரல் சுதர்சன சக்கரத்தில் தற்செயலாக வெட்டப்பட்டபோது, பாண்டவர் மனைவி திரௌபதி அவள் சேலையில் ஒரு துண்டைக் கிழித்து கிருஷ்ணரின் காயத்திற்கு கட்டுப் போட்டாள் .அதற்கு கிருஷ்ணர் திரௌபதியை பாதுகாப்பதாக சபதம் எடுத்தார் .இதனால் கௌரவ அரசவையில் திரௌபதி அவமானத்தை எதிர்கொண்ட போது திரௌபதியின் சேலையை நீட்டி கிருஷ்ண பகவான்  அவள் கண்ணியத்தை பாதுகாத்தார். இவ்வாறு புராணக் கதைகளிலிருந்து ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது.


இன்றைய காலங்களில் அவரவர் வசதிக்கு ஏற்ப சகோதர ,சகோதரிகள் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். செல்வ செழிப்பு மிக்க சகோதர, சகோதரிகள் ஏழை குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். அவர்களுடைய கல்விக்கு உதவி செய்யலாம். இவ்வாறு தங்களால் இயன்ற உதவிகளையும், அன்பையும் பரிமாறி கொண்டு ரக்ஷா பந்தன் பண்டிகையில் அனைவரும் இன்புற்று வாழ்வோமாக.


மேலும் தென் தமிழ் சார்பாக அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எங்களுடைய மனமார்ந்த ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள் . வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.