படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்! (பழமொழியும் உண்மை பொருளும்)
- ஆ.வ. உமாதேவி
ராமாயணத்தை படிக்கிறவன், பெருமாள் கோயிலை இடிப்பானா? திருமாலின் அவதாரமான ராமபிரானின் வரலாற்றை கேட்டுவிட்டு, திருமால் உறைகின்ற, பெருமாள் கோயிலை யாராவது இடிப்பார்களா? இதன் சரியான பொருளை புரிந்து கொள்ளாமல் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறோம்.
சொன்னதை எல்லாம் சாமி மாடு மாதிரி தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, அதற்கு சற்றும் பொருந்தாமல், நேர் எதிரான நடவடிக்கைகளில், ஈடுபடுவதை குறிப்பிட்டு, குறை கூறுவது என்ற பொருளில் தான் இந்த பழமொழியை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்வோமா?
அக்காலத்தில் மன்னர்களும் செல்வந்தர்களும் கோவில்களுக்கு தானம் வழங்குவது வழக்கம். நெல், ஆடு, மாடு மற்றும் ஆறு கால பூஜைகளுக்கு தேவையான பொருள்களும் விளக்கு ஏற்ற தேவையான எண்ணெய் போன்ற பொருள்களையும், அவரவர் வசதிக்கேற்ப கோயில்களுக்கு தானமாக வழங்குவர். இவ்வாறு தானம் வழங்கப்பட்ட தகவல்களை கோயில்களின் கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
அவ்வாறு மானியமாக கொடுக்கப்பட்ட நெல்லை குத்தி, அரிசியாக்கி கொடுக்கும் ப ணிக்காக சிலர் அமர்த்தப்படுவார்கள். அக்காலங்களில் இவ்வாறு போகிறவர்கள், அந்தப் பணிக்கான கூலியை எதிர்பார்த்துப் போக மாட்டார்கள். இறைவனுக்கு தன்னால் முடிந்த தொண்டாக கருதினர். சேவை மனப்பான்மையுடன் செய்தனர். இந்த தன்னலமில்லா சேவையை செய்தவர்களுக்கு, இராமபிரானின் திவ்ய நாமப் பெருமைகளை கூறி, இராமாயணக் கதையை அவர்களுக்கு கூறுவார்கள்.
"படிக்கிறது ராமாயணம்; இடிக்கிறது பெருமாள் கோயில்"!
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற இழிவான பொருளை விட்டு விடுவோம்.
பெருமாள் கோயிலுக்கு சென்று, நெல்லை இடித்துக் கொடுத்துவிட்டு, ராமாயண கதையை செவிகளில் கேட்டு சிந்தையில் பதியச் செய்து கொண்டவர்களை பற்றிய பழமொழி இது என்பதை இப்போது தெரிந்து கொண்டோம் அல்லவா!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)