உறவுகளுக்குள் தொலைந்துபோன அன்பு!

Su.tha Arivalagan
Nov 10, 2026,11:31 AM IST

- கவிஞர் மு.ரம்யா ஆனந்த்


ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,

உள்ளங்கள் தூரமாகின்றன!

ஒரே மேசையில் அமர்ந்தாலும்,

உரையாடல்கள் குறைகின்றன!


ஒருகாலம் சிறு புன்னகைக்காக,

உறவுகள் ஒன்றுகூடி மகிழ்ந்தன!

இன்றோ ஒரு வார்த்தை பேசக்கூட,

ஆயிரம் காரணங்கள் தேடுகின்றன!


அன்பாகப் பேசிய வார்த்தைகள்,

அவசரத்தில் மறைந்துபோகின்றன!

அக்கறையுடன் கேட்ட கேள்விகள்,

அலைபேசிக்குள் தொலைந்துபோகின்றன!




பணம் கொடுத்து பொருட்கள் வாங்கலாம்,

பாசத்தை விலைக்கு வாங்க முடியுமா?

பெரிய வீடுகளைக் கட்டிவிடலாம்,

அதில் நெருக்கத்தை உருவாக்க முடியுமா?


சின்னச் சின்ன சண்டைகள்கூட,

பெரிய சுவர்களைக் கட்டுகின்றன!

சொல்லாமல் விட்ட மன்னிப்புகள்,

சில உறவுகளைப் பிரிக்கின்றன!


யார் பெரியவர் என்ற போட்டியில்,

உறவின் அழகு தொலைகிறது!

யார் முதலில் பேசுவது என்ற பிடிவாதத்தில்,

பல அன்புகள் மௌனமாகின்றன!


உறவென்பது இரத்தத்தில் மட்டும் இல்லை,

இதயத்தின் புரிதலிலும் இருக்கிறது!

அருகில் இருப்பதில் மட்டும் இல்லை,

அன்புடன் அணைப்பதிலும் இருக்கிறது!


தவறு செய்யாத மனிதர் இல்லை,

தவறை மன்னிப்பதும் எளிதில்லை!

ஆனால் புரிந்துகொள்ள முயலாதபோது,

உறவுகள் நிலைத்திருக்க வழியில்லை!


வெற்றி பெற்றால் வாழ்த்தும் உறவுகளைவிட,

வீழ்ந்தபோது தோள் கொடுப்பவர்கள் உயர்ந்தவர்கள்!

நம் மகிழ்ச்சியில் பங்கெடுப்பவர்களைவிட,

நம் வலியையும் புரிந்துகொள்பவர்கள் சிறந்தவர்கள்!


இன்னும் காலம் இருக்கும்போதே,

அன்பை வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வோம்!

உறவுகள் அருகில் இருக்கும்போதே,

உண்மையான பாசத்தைப் பகிர்ந்துகொள்வோம்!


கோபம் வந்தால் கொஞ்சம் அமைதியாக இருப்போம்,

தவறு நடந்தால் மன்னிப்புக் கேட்போம்!

பிடிவாதத்தைவிடப் பாசத்தைத் தேர்ந்தெடுத்து,

பிரிவைவிடப் புரிதலை வளர்ப்போம்!


ஏனெனில்…


உறவுகள் என்பது வாழ்வின் பரிசு,

அன்பு என்பது அதன் உயிர்!

அந்த அன்பை இழந்துவிட்டால்,

அருகிலிருந்தும் தூரமாகிவிடும் இதயம்! 


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)