சிரிப்புக்குப் பின்னால் சில கண்ணீர் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (4)
- மு. ரம்யா ஆனந்த்
முகத்தில் சிரிப்பை அணிந்துகொண்டு,
மனதின் வலியை மறைத்துக்கொண்டு,
உலகத்தின் முன் உறுதியாய் நின்று,
உள்ளுக்குள் தினமும் உடைந்துபோகிறோம்!
“எப்படி இருக்கிறாய்?” என்று கேட்பார்கள்,
“நன்றாக இருக்கிறேன்!” என்று சொல்வோம்,
நெஞ்சுக்குள் ஆயிரம் கவலை இருந்தும்,
நிம்மதியாய் இருப்பதுபோல் நடிப்போம்!
கண்ணீரைத் துடைக்கக் கைகள் இருந்தும்,
கவலையைப் பகிர மனமில்லாமல்,
இரவின் மடியில் தலைசாய்த்து,
இமை மூடாமல் தவித்திருப்போம்!
சில வலிகளைச் சொல்ல முடியாது,
சில காயங்களைப் பகிர முடியாது,
சில நினைவுகளை மறக்க முடியாது,
சிரிப்புக்குப் பின்னால் மறைத்துவிடுவோம்!
ஆனால் ஒன்று மட்டும் உண்மை…
அழுவது பலவீனம் அல்ல,
மனதில் இருப்பதைச் சொல்வது தவறல்ல,
ஆறுதல் தேடுவதும் குற்றமல்ல!
சிரிப்பதற்குப் பின்னால் வலி இருந்தால்,
அந்த மனதிற்கும் அன்பு தேவை!
எல்லோரையும் சிரிக்க வைப்பவர்களுக்கும்,
யாரோ ஒருவரின் ஆறுதல் தேவை!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)