மருமகளுக்கு மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு?
- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
பெற்ற தாய் மடியை விட்டும்,
தந்தை தரும் நிழலை விட்டும்,
உடன்பிறந்தோர் பாசத்தை விட்டும்,
பழகிய உறவுகள் அனைத்தையும் விட்டும்…
புகுந்த வீட்டுப் பந்தமென்று,
புது உறவுகளை நம்பி வந்து,
கணவனே உலகம் என்று,
கனவுகளோடு வாழ வருகிறாள் ஒரு பெண்!
தன் வீட்டில் இளவரசியாய் வாழ்ந்தவள்,
புகுந்த வீட்டில் மருமகளாகிறாள்…
தன் விருப்பங்களைச் சுருக்கிக்கொண்டு,
பிறர் விருப்பங்களில் மகிழ்ச்சியைத் தேடுகிறாள்!
தவறு செய்தால் தட்டிக் கேட்க,
தியாகம் செய்தால் பாராட்ட மறுக்க,
அவள் அன்பை உரிமையென்று எடுத்துக்கொண்டு,
அவள் கண்ணீரை நடிப்பென்று சொல்வதேன்?
ஒரு வீட்டிற்கு மருமகனாய் வருபவனுக்கு,
வாசலில் வரவேற்பு…
வார்த்தைகளில் மரியாதை…
விருந்தில் தனி உபசரிப்பு…
அதே வீட்டிற்கு மருமகளாய் வருபவளுக்கு,
ஏன் இத்தனை எதிர்பார்ப்புகள்?
ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்?
ஏன் அவள் அன்பிற்குக் கூட
ஆயிரம் சோதனைகள்?
மருமகன் என்றால் மகனாக ஏற்கிறீர்கள்,
மருமகள் என்றால் மட்டும் ஏன்
மகளாக ஏற்கத் தயங்குகிறீர்கள்?
அவளும் ஒருவரின் செல்ல மகள்தானே?
அவளுக்கும் ஒரு குடும்பம் இருந்ததுதானே?
அவளுக்கும் ஆசைகள், கனவுகள்,
ஆறுதல் தேடும் இதயம் இருந்ததுதானே?
மருமகள் என்பவள்
வீட்டு வேலைகளைச் செய்ய வந்தவள் அல்ல…
உறவுகளின் சுமைகளைச் சுமக்கப் பிறந்தவளும் அல்ல…
அவளும் அன்பை எதிர்பார்க்கும் பெண்,
மரியாதையோடு வாழத் தகுதியானவள்!
மருமகனை மகனாகப் பாருங்கள்,
மருமகளையும் மகளாகப் பாருங்கள்…
உறவுகளில் பாகுபாடு வேண்டாம்,
உள்ளங்களில் வேற்றுமை வேண்டாம்!
ஒரு பெண் பிறந்த வீட்டை விட்டுப் பிரிவது
உறவுகளை இழப்பதற்காக அல்ல…
இன்னொரு குடும்பத்தோடு
புதிய உறவுகளைப் பெறுவதற்காக!
அவள் வந்த வீட்டில்
அன்பு கிடைத்தால் அது சொர்க்கம்…
அவள் கண்ணீருக்குக் காரணமானால்
அதே வீடு அவளுக்குச் சிறையாகும்!
மருமகளாக வந்தவளை
மகளாக ஏற்றுக்கொள்ளுங்கள்…
அவள் பிறந்த வீட்டின் பாசத்தைப் போலவே,
புகுந்த வீட்டிலும் பாசம் மலரட்டும்!
உறவுகள் ஒன்றாகும் இடத்தில்
பாகுபாட்டிற்கு மட்டும் ஏது நியாயம்?
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)