நாளை நமக்கான நாளாகும் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (10)

Su.tha Arivalagan
Nov 01, 2026,11:47 AM IST
- மு. ரம்யா ஆனந்த்

இன்றைய நாள் இனிமையில்லை,
இதயம் கூட அமைதியில்லை!
நினைத்ததெல்லாம் நடக்கவில்லை,
நிம்மதியும் மனதில் நிலைக்கவில்லை!

காலையில் மலரும் பூவுக்குக்கூட,
இரவு என்னும் இருள் உண்டு!
வாழ்க்கையில் உயர நினைப்பவர்க்கும்,
வலிகள் நிறைந்த பாதை உண்டு!

கண்ணீரை மறைத்து வாழ்ந்தாலும்,
கனவுகளை மறந்துவிடாதே!
உலகமே உன்னை மறந்தாலும்,
உன்னை நீயே இழந்துவிடாதே!

இன்று உன் உழைப்புக்குப் பலன் இல்லாமல் போகலாம்,
உன் முயற்சிகள் தோல்வியில் முடியலாம்!
ஆனால் ஒவ்வொரு தோல்விக்குள்ளும்,
ஒரு புதிய பாடம் ஒளிந்திருக்கலாம்!



விதைத்த விதை முளைக்கவில்லை என்று,
விவசாயி நிலத்தை வெறுப்பதில்லை!
மழை தாமதமாகப் பொழிகிறது என்று,
வானத்தைப் பார்த்துக் காத்திருப்பதை நிறுத்துவதில்லை!

அதுபோலத்தான் வாழ்க்கையும்,
அவசரப்பட்டு முடிவெடுக்காதே!
உன் நேரம் வரவில்லை என்பதற்காக,
உன் திறமையைச் சந்தேகிக்காதே!

நேற்றைய வலிகள் மறையலாம்,
இன்றைய கவலைகள் விலகலாம்!
நம்பிக்கையோடு நீ நடந்தால்,
புதிய பாதைகள் பிறக்கலாம்!

பிறர் வெற்றி உனக்கொரு பாடம்,
உன் தோல்வி உனக்கொரு அனுபவம்!
இரண்டையும் ஏற்றுக்கொண்டால்,
உன் வாழ்க்கையே ஒரு காவியம்!

காத்திருக்கும் காலம் மாறும்,
கண்ணீரின் அர்த்தம் புரியும்!
உன் விடாமுயற்சியின் முன்னால்,
தடைகளும் ஒருநாள் விலகும்!

இன்று முடியாதது நாளை முடியலாம்,
இன்று கிடைக்காதது நாளை கிடைக்கலாம்!
நம்பிக்கையுடன் உழைத்துக்கொண்டே இரு,
நல்ல மாற்றம் உன்னைத் தேடி வரலாம்!

நேற்றை நினைத்து வருந்தாதே,
நாளையை நினைத்து அஞ்சாதே!
இன்று உன்னால் முடிந்ததைச் செய்,
உன் கனவுகளுக்காகத் தொடர்ந்து உழை!

இது முடிவல்ல…
புதிய தொடக்கம்!

இது தோல்வியல்ல…
வெற்றிக்கான பயணம்!

இன்று நம் கையில் முயற்சி இருக்கிறது,
நாளை நம் வாழ்வில் மாற்றம் வரலாம்!

நம்பிக்கையோடு காத்திருப்போம்…
விடாமுயற்சியோடு பயணிப்போம்…

ஏனென்றால்…

நாளை நமக்கான நாளாகும்!

(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)