என்னை நான் நேசிக்கக் கற்றுக்கொண்டேன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (11)

Su.tha Arivalagan
Nov 02, 2026,02:11 PM IST

- மு. ரம்யா ஆனந்த்


எல்லோருக்கும் பிடித்தவளாக

இத்தனை நாள் வாழ்ந்துவிட்டேன்…

எல்லோரின் மனதையும் வெல்ல நினைத்து,

என்னை நானே மறந்துவிட்டேன்!


பிறர் சிரிக்க வேண்டும் என்பதற்காக,

என் கண்ணீரை மறைத்துவிட்டேன்!

பிறர் மனம் வலிக்கக் கூடாதென்று,

என் வலிகளை விழுங்கிவிட்டேன்!


எல்லோருக்கும் ஆறுதல் சொன்னேன்,

என் காயங்களுக்கு மருந்து தேடவில்லை!

எல்லோருக்கும் துணையாக நின்றேன்,

எனக்கான நேரத்தை ஒதுக்கவில்லை!




என் மௌனத்தைப் பலவீனம் என்றார்கள்,

என் பொறுமையைத் தோல்வி என்றார்கள்!

என் அன்பைப் புரிந்துகொள்ளாதவர்கள்,

என் மனதையும் காயப்படுத்தினார்கள்!


ஒருநாள் என்னையே கேட்டுக்கொண்டேன்,

“எனக்காக நான் வாழ்ந்தது எப்போது?”

என் மனதின் குரலைக் கேட்டபோதுதான்,

என் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்தது!


இனி யாருக்காகவும்

என் கனவுகளைத் தொலைக்க மாட்டேன்!

யாருடைய அன்பைப் பெறுவதற்காகவும்,

என் சுயமரியாதையை இழக்க மாட்டேன்!


பிறருக்கு அன்பு கொடுப்பேன்,

என் மனதுக்கும் அன்பு கொடுப்பேன்!

பிறரின் கண்ணீரைத் துடைப்பேன்,

என் கண்ணீரையும் மதித்திடுவேன்!


என் குறைகளோடும் என்னை ஏற்றுக்கொள்வேன்,

என் நிறைகளைக் கண்டு மகிழ்ந்திடுவேன்!

மற்றவரோடு என்னை ஒப்பிடாமல்,

என் பாதையில் நம்பிக்கையோடு நடந்திடுவேன்!


என்னை நேசிப்பது சுயநலமல்ல,

என் மனதை மதிப்பது தவறல்ல!

எல்லோரையும் மகிழ்விக்க வேண்டியதில்லை,

என் மகிழ்ச்சியும் முக்கியம்தானே!


இத்தனை நாள் பிறருக்காக வாழ்ந்தேன்,

இனி எனக்காகவும் கொஞ்சம் வாழ்வேன்!

என்னைப் புரியாத உலகத்திற்காக

என் மதிப்பை மாற்றிக்கொள்ள மாட்டேன்!


இன்று நான் உணர்ந்துகொண்டேன்…

என் மகிழ்ச்சியும் முக்கியம் என்று!

இன்று நான் கற்றுக்கொண்டேன்…

என்னை நானே நேசிக்க வேண்டும் என்று!


ஆம்…

எல்லோரையும் நேசிக்கும் நான்,

என்னை நேசிக்கவும்

கற்றுக்கொண்டேன்! 


(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)