அண்ணா – என் வாழ்வின் முதல் நண்பன் .. ரம்யாவின் கவிதைத் தோட்டம்
- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
என் அன்பு அண்ணன் கமலக்கண்ணனுக்கு…
சிறுவயதில் சண்டை போட்டோம்,
சில நேரம் பேசாமல் இருந்தோம்!
அம்மா பார்த்து வருந்தும் அளவுக்கு,
அடிக்கடி இருவரும் மோதிக்கொண்டோம்!
ஆனால் எங்கு சென்றாலும் என்னை,
எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காதவன் நீ!
உலகத்தில் உறவுகள் பல இருந்தாலும்,
என் உண்மையான அண்ணன் நீதானென்று
ஒவ்வொரு முறையும் நிரூபித்தவன் நீ!
பெரியம்மா மகனும் அண்ணன்தான்,
சித்தி மகனும் அண்ணன்தான்,
சித்தப்பா மகனும் அண்ணன்தான்…
ஆனால் உடன்பிறந்த உன் பாசத்திற்கு
ஈடாக எந்த உறவும் இல்லையென்று
என் வாழ்வில் உணர்த்தியவன் நீ!
உனக்கென்று வாங்க வேண்டியதை,
எனக்காக விட்டுக் கொடுப்பாய்!
அம்மா அப்பாவிடம் அடிக்கடி,
“எனக்கு வேண்டாம்… தங்கைக்குக் கொடுங்கள்”
என்று சொல்லி என் ஆசையை
உன் ஆசைக்கு மேலே வைப்பாய்!
திருமணத்திற்கு முன்பு சண்டையிட்டோம்,
திருமண நாளில் பிரிவை உணர்ந்தோம்!
வீட்டை விட்டு நான் புறப்பட்ட அந்த நாளில்,
கண்ணீர் ததும்ப நீ நின்ற காட்சி…
இன்றும் என் கண்களை நனைக்குதண்ணா!
அன்று நீ அழுததைப் பார்த்தபோதுதான்,
உன் அன்பின் ஆழத்தை உணர்ந்தேன்!
சண்டை போட்ட நாட்கள் மறந்துபோனாலும்,
வழியனுப்பிய அந்தக் கண்ணீரை
என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்!
திருமணத்திற்குப் பின்னும் மாறவில்லை,
உன் பாசத்தின் அழைப்பும் குறையவில்லை!
என் தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம்,
உன் குரல்தான் அதிகம் கேட்கிறது!
“சாமி… சாமி…” என்ற உன் அழைப்பில்,
என் மனம் மீண்டும் குழந்தையாகிறது!
என்னைச் சாமி என்று அழைக்கிறாய்,
ஆனால் என் உண்மையான சாமி நீதானண்ணா!
என் கண்ணீரைத் துடைக்கும் கரமும் நீ,
என் மகிழ்ச்சியில் மகிழும் மனமும் நீ!
என் இரண்டு குழந்தைகளுக்கும்
தாய்மாமனாய் மட்டும் இல்லை…
தாயின் மறு உருவமாய் மாறி,
அன்பை அள்ளித் தருகின்றாய்!
குறிப்பாக என் மகளிடம் நீ காட்டும் பாசம்,
என் சிறுவயதை மீண்டும் நினைவூட்டுகிறது!
என்னிடம் காட்டிய அதே அன்பை,
அவளிடமும் காட்டும் உன்னைப் பார்த்தால்,
என் மனம் நன்றியால் நிறைகிறது!
காலம் நம்மை வளர்த்திருக்கலாம்,
கடமைகள் நம்மைப் பிரித்திருக்கலாம்!
ஆனால் உன் தங்கையாக நான் இருக்கும்
உரிமை மட்டும் என்றும் மாறாதிருக்கட்டும்!
அண்ணா…
அன்று என்னைப் பிரியும்போது
உன் கண்களில் வந்த கண்ணீருக்கு,
இன்று வரை என்னால் பதில் சொல்ல முடியவில்லை!
நீ கொடுத்த அன்புக்கு ஈடாக
என்னிடம் எதுவுமே இல்லையண்ணா…
உன்னை அளவில்லாமல் நேசிப்பதைத் தவிர!
மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால்,
மீண்டும் உன் தங்கையாகப் பிறக்க வேண்டும்!
சண்டை போடும் அந்தச் சிறுவயதும் வேண்டும்,
சாமி என்று அழைக்கும் உன் குரலும் வேண்டும்!
கமலக்கண்ணா…
நீ என் அண்ணன் மட்டுமல்ல,
என் சிறுவயதின் அழகான நினைவு!
நான் பெற்ற முதல் நண்பன்,
எனக்காக விட்டுக்கொடுத்த அன்பு,
என் குழந்தைகளின் அன்புத் தாய்மாமன்!
உலகம் எனக்குப் பல உறவுகளைத் தரலாம்,
ஆனால் உன்னைப் போன்ற அண்ணன் கிடைக்காது!
சண்டையில் தொடங்கிய நம் உறவு,
கண்ணீரில் அதன் ஆழத்தை உணர்த்தியது…
என் முதல் நண்பனாக நீயே வேண்டும்!
என்றென்றும் உன் செல்லத் தங்கையாக,
உன் அன்பில் வாழ வேண்டும்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)