இரவு!

Su.tha Arivalagan
Nov 27, 2026,10:38 AM IST

- "சொல்லருவி" ரஞ்சிதா மணியரசன்


கருத்த

பொழுதில்

கச்சிதமாய் கலந்து 

கொள்கிறது

அமைதியும்


அத்தனை மரங்களும்

அசைவற்று

அடம்பிடித்து

சிலை போல்

நிற்கிறது இரவில்




மழைகூட

மௌனமொழியாலே

மண் காதலியை

தொட்டுத்தொட்டு

கலக்கிறது


பாறைகளும்

ஊடல்கொண்டு

உடல் நனைந்ததை

காயவைத்து விடுகிறது

இரவினுள்ளே


மின்மினிபூச்சிக்கு

காதலன்

இரவாக இருக்குமோ


மருதாணிக்கும்

அதே கதிதான்

வெட்கப்பட்டு

சிவந்து விடுகிறாள்

காதலன்

வந்தபின்


இருண்ட பின்

அசிங்கமும்

ஆபாசமும்

அறவே தெரியாது


ரணமென

ஒவ்வொரு ராப்பொழுதும்

கடந்து கொண்டிருக்கிறாள்

மனம் பொருந்தாத

வாழ்க்கையில்

உடல் பொருத்தத்தில்


அயராது

உழைத்து களைத்த

உயிரிகள் அயர்ந்து

தூங்குவதும்

இரவில்தான் அதிசயமேதுமில்லை


பார்வையற்றவர்க்கு

இரவே எமனாக


பிரம்மகமலத்திற்கும்

அல்லிக்கும்

அந்திமல்லிக்கும்கூட

அதீத காதல்

இரவின் மீது


கவிஞர்களுக்கு

இருட்டிற்கும்

பிறந்த பிள்ளை

கவிதை!


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர், பாடகி என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)