விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க போவதில்லை .. நடிகர் ரவிமோகன் அறிவிப்பு
சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரவிமோகன் இன்று அளித்த பேட்டியில் தனது மனைவி ஆர்த்தியை கடுமையாக விமர்சித்ததுடன், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும், ஏற்கனவே நடித்த படங்களை வெளியிட போவதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகவும் உருக்கமாக, கண்ணீருடன் ரவி மோகன் பேட்டி அளித்தார்.
பேட்டியின்போது அவர் கூறியதாவது:
சினிமா குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், எனது தந்தை எடிட்டர் மோகன் எங்களை ஒருபோதும் 'சினிமா வாரிசுகள்' என்ற தலைக்கணத்தோடு வளர்க்கவில்லை. திரைக்குப் பின்னால் அவர் சிந்திய வியர்வையையும், உழைப்பையும் பார்த்துதான் நான் வளர்ந்தேன்.
வெற்றி என்பது ஒரே இரவில் கிடைப்பதல்ல, தொடர் உழைப்பால் மட்டுமே சாத்தியம் என்பதை என் தந்தை மூலமாகக் கற்றுக்கொண்டேன். எனது தாயார் கொடுத்த உணர்வுப்பூர்வமான ஆதரவையும் இங்கு நான் சொல்ல வேண்டும்.
தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் இருக்கவும், எதார்த்தமாக வாழவும் எனது தாயின் வளர்ப்பே காரணம்.
என் அண்ணன் எப்போதும் எனக்கு ஒரு மறைமுக வழிகாட்டியாக இருந்திருக்கிறார். அவருடைய தனித்துவமான உழைப்பும், நிதானமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தின. எங்கள் இருவருக்குள்ளும் எப்போதும் ஒரு பரஸ்பர மரியாதையும், அன்பும் உண்டு என்றார் ரவி மோகன்.
மனைவி மீது பாய்ச்சல் :
ரவி மோகன், மனைவி ஆர்த்தி உடனான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் பாடகி கெனிஷா தன்னை பற்றி பேச தடை விதிக்க வேண்டும் என்று ஆர்த்தி, கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட், ஆர்த்தி பற்றி பேச கெனிஷாவிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தபோதுதான் ரவி மோகன் மேற்கண்ட குமுறலை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். குழந்தைகளின் நலனை மனதில் வைத்து தான் அமைதி காத்தேன். என்னை பெட்டி பாம்பு போல் மாற்றி, முதுகில் குத்துகிறார்கள் என்று நன்கு தெரிந்தும் அமைதியாக இருந்தேன். எனது பெற்றோரின் வளர்ப்பு காரணமாக அனைத்தையும் பொறுத்துக் கொண்டு சிரித்தபடி இருந்தேன்.
எனது குழந்தைகளை சந்திக்க விட மறுக்கிறார்கள். பாதுகாவலர்களுடன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள். எனக்கு ஆறுதலாக இருந்த ஒரு பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி அனுப்பி விட்டீர்கள்.
பெண்களுடன் பழகுகிறேன் என்கிறார்கள். அழகான பெண்களுடன் நடிப்பது தான் என வேலையே. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச, விமர்சிக்க உனக்கு தகுதி இல்லை. இதுவரை அமைதியாக இருந்து விட்டேன். இனியும் நான் சாதுவாக இருக்க மாட்டேன்.
நான் நடித்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளன. எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி படங்களில் நடிக்க மாட்டேன். ஏற்கனவே தயாரித்த படங்களையும் வெளியிட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேட்டி முழுக்க மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், கண்களில் நீர் ததும்பவும் பேசினார் ரவி மோகன். தனது பிள்ளைகளுக்காக மட்டுமே தான் உயிரோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.