அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை: அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுங்கிப்போயுள்ளது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் மக்கள் வரவேற்கத் தயாராக உள்ளனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், எம்ஜிஆர் காலம் தொட்டு, அம்மா காலம் வரை அதிமுக இருந்து வருகிறது. இன்றைக்கு இந்த இருபெரும் தலைவர்களின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் தற்போது தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கி 175 தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி எழுச்சி பயணத்த மேற்கொண்டார். அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கும் முதல் நாளில் 1,237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 234 தொகுதிகளில் தனி தொகுதியை தவிர 349 தொண்டர்கள் தங்கள் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனுவை அளித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், கூட்டணியை டெல்லியில் பாஜகவும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வர்கள். அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது. திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்றுக் கொள்பவர்கள், அதிமுக தலைமை ஏற்று கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும். யார் யார் கூட்டணிக்கு வருவார்கள் என்று ஜாதகம் பார்க்க முடியாது. திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் மக்கள் அவர்களை வரவேற்க தயாராக உள்ளார்கள். அதிமுக ஒரே எதிரி திமுக தான். 54 வருடங்களாக எங்களுக்கு எதிரி திமுக தான். ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் ஒரு லட்சம் உதயநிதி ஸ்டாலின் வந்தாலும அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.