Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை: ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது. இதனால் மக்களிடையே திடீர் குழப்பம் ஏறப்ட்டுள்ளது. ஆனால் தற்போது யுபிஐயுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும் பேடிஎம் செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 24, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (Paytm Payments Bank Limited - PPBL) நிறுவனத்தின் வங்கி உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. வங்கியின் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களின் நலனுக்கு எதிராக இருந்ததைக் காரணங்களாகக் காட்டி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் கீழ், இனி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி எந்தவொரு வங்கிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்குத் தேவையான போதுமான நிதி வங்கியிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி உறுதி அளித்துள்ளது.
வங்கியின் கணக்கில் மீதமுள்ள பணத்தை நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம் அல்லது வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், புதிதாகப் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது வேலட்டில் (Wallet) டாப்-அப் செய்யவோ முடியாது.
கடந்த சில ஆண்டுகளாகவே விதிமுறைகளை மீறியது மற்றும் போதிய ஆவணங்கள் இன்றி கணக்குகள் தொடங்கியது போன்ற காரணங்களால் பேடிஎம் வங்கி மீது ரிசர்வ் வங்கி அதிருப்தியில் இருந்தது. பலமுறை எச்சரித்தும் மாற்றங்கள் இல்லாததால், தற்போது வங்கியையே மூடுவதற்கு ரிசர்வ் வங்கி உயர்நீதிமன்றத்தை அணுகவுள்ளது.
மக்களின் கவனத்திற்கு
ரிசர்வ் வங்கி நடவடிக்கை காரணமாக, பேடிஎம் வங்கி தான் மூடப்படுகிறது, பேடிஎம் செயலி (App) அல்ல. உங்கள் வங்கி கணக்கு பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் இருந்தால், உடனடியாக பணத்தை வேறு வங்கிக்கு மாற்றிக் கொள்வது நல்லது. அதேசமயம், நீங்கள் பேடிஎம் செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
- பேடிஎம் செயலி (Paytm App) தொடர்ந்து செயல்படும்.
- ரீசார்ஜ் மற்றும் பிற சேவைகளுக்கு இதைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் பேடிஎம் ஆப், பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால் UPI தொடர்ந்து வேலை செய்யும்.
- பேடிஎம் வேலட்டில் உள்ள பணத்தைப் பயன்படுத்தலாம் அல்லது வங்கிக்கு மாற்றலாம். புதிதாக அதில் பணம் சேர்க்க முடியாது.
- பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வழங்கிய FASTag-களை இனி டாப்-அப் செய்ய முடியாது. நீங்கள் புதிய FASTag வாங்க வேண்டியிருக்கும்.