இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்

Su.tha Arivalagan
Jul 28, 2026,10:32 AM IST

புதுடெல்லி: இந்தியாவில் காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாகப் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் பணப்புழக்கத்தில் நவீன தொழில் நுட்பத்தைப் புகுத்தவும், ரூபாய் நோட்டுகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.


முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் :

இந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான ரூ.10 மற்றும். ரூ.20 பிளாஸ்டிக் நோட்டுகள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக மொத்தம் ரூ.200 கோடி மதிப்பிலான இந்த நோட்டுகள் குறிப்பிட்ட சில நகரங்களில் முதற்கட்டமாகப் புழக்கத்தில் விடப்பட உள்ளன.


காகித நோட்டுகள் செல்லுமா? 




புதிய பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காகித நோட்டுகளுடன் இணையான புழக்கத்தில் இந்த பிளாஸ்டிக் நோட்டுகளும் பயன்பாட்டில் இருக்கும்.


பிளாஸ்டிக் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்:


நீடித்து உழைக்கும் திறன்: காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் சேதமடையாமல் உழைக்கக்கூடியவை.


சுத்தம் மற்றும் சுகாதாரம்: இவை எளிதில் கிழியாது; தண்ணீரில் நனைந்தாலும் அல்லது அழுக்கடைந்தாலும் எளிதில் துடைத்துச் சுத்தம் செய்து பயன்படுத்த முடியும்.


போலி நோட்டுகளுக்குக் கடிவாளம்: அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாலிமர் தாளில் அச்சடிக்கப்படுவதால், இவற்றைப் போலியாக அச்சிடுவது மிகவும் கடினம்.


பராமரிப்புச் செலவு குறைவு: நோட்டுகள் அடிக்கடி சேதமடைந்து புதிய நோட்டுகளை அச்சடிக்கும் செலவு அரசிற்கு பெருமளவில் குறையும்.


உலகளவில் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்கெனவே பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே பாணியில் இந்தியாவிலும் பிளாஸ்டிக் பணப் பயன்பாடு விரைவில் தொடங்கவுள்ளது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.