ரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு: கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!

Su.tha Arivalagan
Oct 07, 2026,11:10 AM IST

மும்பை:இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது பணவியல் கொள்கைக் ஆய்வறிக்கையை வெளியிட்டு, வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான 'ரெப்போ வட்டி விகிதத்தை' (Repo Rate) 0.25 சதவீதம் உயர்த்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   


0.25% உயர்வு – புதிய வட்டி விகிதம்:

நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தைச் சீராகப் பராமரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வினால், இதுவரை இருந்த ரெப்போ வட்டி விகிதத்துடன் 0.25% சேர்ந்து, தற்போதைய புதிய வட்டி விகிதம் 5.5% ஆக அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே 'ரெப்போ வட்டி' எனக் குறிப்பிடப்படுகிறது. இதில் மாற்றம் செய்யப்படும் போது, அது வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்திலும் நேரடியாகப் பிரதிபலிக்கும்.   


பொதுமக்களுக்கு ஏற்படும் தாக்கங்கள்:




ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால், வணிக வங்கிகளும் (Public & Private Banks) மற்றும் நிதி நிறுவனங்களும் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த அதிக வாய்ப்புள்ளது.   


வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன்:

வட்டி விகிதம் உயர்த்தப்படுவதன் மூலம் பொதுமக்கள் ஏற்கனவே பெற்றுள்ள மற்றும் புதிதாகப் பெறவிருக்கும் வீட்டுக்கடன் (Home Loan), வாகனக் கடன் (Auto Loan), தனிநபர் கடன் (Personal Loan) போன்ற அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதங்களும் உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.   


மாதத் தவணை (EMI) அதிகரிக்கும்:

மாறுபடும் வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் மாதாந்திரத் தவணைத் தொகை (EMI) அதிகரிக்கக்கூடும். அல்லது கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவு (Tenure) நீட்டிக்கப்படலாம்.   


டெபாசிட் வட்டி உயர வாய்ப்பு:

கடன் வட்டி உயரும் அதே வேளையில், வங்கிகளில் பொதுமக்கள் செய்யும் நிலையான வைப்புத் தொகைக்கு (Fixed Deposits - FD) வங்கிகள் வழங்கும் வட்டி விகிதமும் உயர வாய்ப்புள்ளது. இது சேமிப்பாளர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும் சாதகமான சூழலை உருவாக்கும்.


பொருளாதார நிபுணர்களின் பார்வை:

நாட்டில் ஏற்படும் நிதி நெருக்கடிகளைக் கட்டுப்படுத்தவும், சந்தையில் பணப்புழக்கத்தைச் சீரமைத்து விலைவாசி உயர்வைக்கட்டுக்குள் வைக்கவும் ரிசர்வ் வங்கி இத்தகைய வட்டி விகித மாற்றங்களை மேற்கொள்கிறது.