கடன்பெற்றவர்களை மிரட்டக்கூடாது: ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!

Meenakshi
Feb 14, 2026,04:02 PM IST

சென்னை: வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றவர்களை மிரட்டக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


இன்றைய கால கட்டத்தில் கடன் வாங்கி வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் தான் பலரும் உள்ளனர்.  சிலர் தங்களின் ஆடம்பரத்தை வெளிப்படுத்தவும் கடன் வாங்கி சில தேவையில்லாத செலவுகளையும் செய்து வருகின்றனர். எது எப்படி இருப்பினும், அந்த கடன்களை முறையாக திருப்பி செலுத்திவிட்டால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. அந்தக் கடனை செலுத்தா விட்டால் பல விபரீதங்கள் நடக்கின்றன. கடன் வழங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த முடியாதவர்களை மனதளவில் துன்புறுத்துகின்றன. இதனால் ஒருசிலர் உயிரை விடும் நிலைக்கு சென்று விடுகின்றனர். இதில் இருந்து கடனாளிகளை காப்பாற்ற ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.




வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தத் தவறியவர்களை (Loan Defaulters) மீட்பு முகவர்கள் (Recovery Agents) மிரட்டுவதைத் தடுக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.


அதன்படி, கடன் வசூலிப்பவர்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது. வாடிக்கையாளர்களைத் தகாத வார்த்தைகளால் பேசுவதோ, உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்துவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்குப் போன் செய்து அசிங்கப்படுத்துவது சட்டப்படி தவறு.  வாடிக்கையாளர்களின் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ அல்லது அவர்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதோ கூடாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


இந்த விதிகளை மீறும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி கடுமையான அபராதம் விதிப்பதோடு, குறிப்பிட்ட காலத்திற்கு அவர்கள் கடன் வசூலிக்கும் பணிகளைச் செய்யத் தடையும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.