ராணுவத்திற்கு உதவ தயார்... சண்டிகரில் குவிந்த வரும் இளைஞர்கள்!
சண்டிகர்: ராணுவத்திற்கு உதவ தன்னார்வலர்கள் வரலாம் என்ற அறிவிப்பை அடுத்து சண்டிகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலின் போது ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேர் பலியாயினர். இதன் காரணமாக பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவத்தினரும் எல்லையோர மாநிலங்களில் மே 8,9ம் தேதிகளில் நள்ளிரவில் ட்ரோன் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நாள்தோறும் கடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சண்டிகரில் துணை ஆணையர் நிஷாந்த் குமார் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் தன்னார்வலர்களாக சிவில் பாதுகாப்பு படையில் சேருமாறும், ஆர்வமுள்ளவர்கள் இன்று காலை 10 மணிக்கு தாகூர் தியேட்டருக்கு வரலாம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பை பார்த்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் இன்று காலை முதல் சண்டிகரில் குவித்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்திய ராணுவத்திற்கு உதவத் தயார் எனவும் கோஷமிட்டு வருகின்றனர். இந்த தன்னார்வலர்களுக்கான பயிற்சிகள் இன்று இரவு 10.30 மணியளவில் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி வருகிறது.