தமிழக கவர்னர் ஆர் .என். ரவியை அதிரடியாக மாற்றியதற்கு இது தான் காரணமா?

Su.tha Arivalagan
Mar 06, 2026,05:58 PM IST

டில்லி : தமிழகம் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவிக்கும், ஆளும் திமுக அரசிற்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு இருந்து வந்தது. இப்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆர் .என்.ரவி, தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இந்த மாற்றத்திற்கு தமிழக அரசியல் காரணம் இல்லையாம். அதற்கு பின்னால் வேறு காரணம் இருப்பதாக இருப்பதாக சொல்லப்படுகிறது.


தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் மொத்தம் 8 மாநிலங்களின் கவர்னர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிக்கையின் படி,




- ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் சிவ் பிரதாப் ஷுக்லா, தெலங்கானா ஆளுநராக நியமனம்

- தெலங்கானா மாநில ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா ஆளுநராக நியமனம்

- நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து ஆளுநராக நியமனம்

- ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் சையத் அதா ஹஸ்நைன், பீகார் ஆளுநராக நியமனம்

- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க ஆளுநராக நியமனம்

- கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர், தமிழ்நாடு ஆளுநராக கூடுதல் பொறுப்பு

- லடாக் துணை ஆளுநர் கவீந்தர் குப்தா, ஹிமாச்சலப் பிரதேச ஆளுநராக நியமனம்

- டெல்லி துணை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, லடாக் துணை ஆளுநராக நியமனம். தரஞ்சித் சிங் சந்து, டெல்லி துணை ஆளுநராக நியமனம்


இந்த மாற்றம் ஏன் என்று கேட்டால், இதற்கு மேற்குவங்க அரசியலில் நடைபெற்ற மாற்றம் தான் காரணமாம். மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதன் எதிரொலியாக தான் அவருக்குப் பதிலாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மேற்கு வங்க மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


திடீர் ராஜினாமா - பின்னணி என்ன?


மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் ஆனந்த போஸின் இந்த திடீர் முடிவு அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது ராஜினாமாவுக்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ராஜ் பவனோ அல்லது மத்திய அரசோ இது குறித்து விரிவான விளக்கங்களை அளிக்கவில்லை.


மம்தா பானர்ஜி காட்டம்:


இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் (X தளம்) கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "ஆளுநர் ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா எனக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அரசியல் அழுத்தத்தின் காரணமாகவே அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பாரோ என்று நான் சந்தேகிக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மேற்கு வங்கப் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து தன்னிடம் முறைப்படி ஆலோசனை செய்யப்படவில்லை என்றும், இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் மம்தா காட்டமாக விமர்சித்துள்ளார்.


அடுத்து என்ன நடக்கும்?


தமிழகத்தில் திமுக அரசுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, இப்போது மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையிலான அரசியல் உறவு எப்படி இருக்கும் என்பதே தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மொத்தத்தில், மேற்கு வங்கத் தேர்தல் களத்தில் இந்த ஆளுநர் மாற்ற விவகாரம் ஒரு புதிய அனலைக் கிளப்பியுள்ளது.