25, 26 தேதிகளில் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.. இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Manjula Devi
May 23, 2025,05:08 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.


தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் கோடைக் காலமான அக்னி நட்சத்திர காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.



இந்த நிலையில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மே 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களுக்கு அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்பதால் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் எனவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிக்கு அப்பால் மத்திய அரபிக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் எனவும் தெரிவித்துள்ளது.