புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை : புதிய வாக்காளர்களுக்கு வண்ணமயமான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை (EPIC) வழங்க உள்ளதாகத் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி' (Special Intensive Revision - SIR) முடிவடைந்த நிலையில், சுமார் 97 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, புதிதாகப் பதிவு செய்துள்ள இளம் வாக்காளர்களுக்கு நவீன மற்றும் வண்ணமயமான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் (EPIC) வழங்கப்படும்.
இந்த புதிய அட்டைகள் காகித அட்டைகளாக இல்லாமல், உயர்தர பிளாஸ்டிக் (PVC) அட்டைகளாக இருக்கும். இதில் க்யூ.ஆர் கோட் (QR Code) மற்றும் ஹாலோகிராம் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். வரும் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் 'தேசிய வாக்காளர் தினத்தை' முன்னிட்டு இந்த அட்டைகளை விநியோகிக்கத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதுள்ள 5.43 கோடி வாக்காளர்களில், முதல்முறை வாக்களிக்கவுள்ள இளைஞர்களைக் கவரும் வகையிலும், அடையாள அட்டையில் குளறுபடிகளைத் தவிர்க்கவும் இந்த 'கலர்' ஐடி கார்டுகள் ஒரு "காட்சி விருந்தாக" (Colourful Epic) இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பழைய அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவற்றையே பயன்படுத்தலாம் என்றும், விரும்பினால் கட்டணம் செலுத்தி புதிய வண்ண அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.