நீதி தவறா தமிழ் மன்னர்களை நினைவு கூற வேண்டிய நாள் இன்று!

Su.tha Arivalagan
Feb 20, 2026,04:42 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


பசுவிற்கு நீதி வழங்க தன் மகனை தேர்க் காலில் ஏற்றிய மனுநீதிச் சோழனை நினைவு கூற இன்றைய தினத்தை கொண்டாடுவோம்.


என்ன தினமாக இருக்கும் என்று நினைவிற்கு வருகிறதா?


கண்டிப்பாக ஒவ்வொரு தமிழருக்கும் நினைவில் வரும் என்று நினைக்கிறேன்.


நீதி தவறா மன்னர்களை நினைவு கூர்ந்து உலக சமூக நீதி தினத்தை கொண்டாடுவோம்.




உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 20 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை United Nations 2007ஆம் ஆண்டு அறிவித்து, 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.


 இந்த தினம் சமூகத்தில் நிலவும் அநீதிகள், சமத்துவமின்மை பாகுபாடுகள் போன்றவற்றை நீக்கி சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்கு இந்த தினம் கொண்டாடப்படுகிறது .


சமூக நீதி என்பது சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் சம உரிமைகள், சம வாய்ப்புகள் மற்றும் சம மரியாதை பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கை ஆகும். சாதி, மதம், பாலினம், மொழி, பொருளாதாரம் போன்ற அடிப்படைகளில் பாகுபாடு இருக்கக்கூடாது. கல்வி, வேலை, சுகாதாரம், அடிப்படை வசதிகள் போன்றவற்றில் அனைவருக்கும் சம அணுகல் இருக்க வேண்டும். ஏழைகள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்குச் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறுகிறது.


சமூக நீதி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தின் அடிப்படை தூண் ஆகும். சமூகத்தில் நிலவும் சாதி பிரச்சினைகள், ஆண் பெண் பாகுபாடு பிரச்சனைகள்  போன்ற அநீதிகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது.


ஏழ்மை ஒழிப்பு என்பதை மையப்படுத்தி  அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளை ஒழிப்பதற்கு  விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. வேலைவாய்ப்பு சமத்துவத்தை ஊக்குவிக்கிறது. பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்துகிறது. உலகில் இன்னும் பல இடங்களில் குழந்தைத் தொழில் மற்றும் கட்டாயத் தொழில் பெண்கள் மீதான அநீதிகள், பெண்களுக்கு  கல்வி மறுப்பு போன்ற பிரச்சினைகள் நிலவுகின்றன. இவற்றை ஒழிக்க உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை இந்த தினம் நினைவூட்டுகிறது.


1948ஆம் ஆண்டு Universal Declaration of Human Rights வெளியிடப்பட்டதில் மனிதர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து உலகம் முழுவதும் ஒற்றுமை உருவாக்க கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படும்போது சமத்துவம் நிலைநிறுத்தப்படுகிறது.மேலும், அநீதிகள் குறைகிறது.


இந்தியாவில் Constitution of India சமூக நீதி குறித்து வலியுறுத்துகிறது. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி வழங்குவதாக உறுதி செய்கிறது. ஒதுக்கீட்டு முறையின் மூலம் (Reservation system) கல்வி உரிமைச் சட்டம்

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் போன்ற திட்டங்கள் சமூக நீதி முன்னேற்றத்திற்காக செயல்படுகிறது.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடமும்,ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களிடமும் எப்போதும் நீதி தவறாமல் செயல்பட வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  பொதுமக்களாகிய நாம் அனைவரும் நீதி தவறாமல் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)