மிஸ் கூவாகம் 2025 பட்டத்தை வென்றார்.. திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா..!

Manjula Devi
May 13, 2025,11:15 AM IST

விழுப்புரம்: திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகி போட்டியில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகா மிஸ் கூவாகம் 2025 என்ற பட்டத்தை வென்றார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாக்கம் கிராமத்தில் திருநங்கைகளுக்கான கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் கொண்டாட கூடிய சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஏனெனில் நாடு முழுவதும் திருநங்கைகள் ஒன்று கூடி இந்த விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் கூவாக்கம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி தொடங்கி, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.


இதில் நேற்று விழுப்புரம் மாவட்டம், ஆஞ்சநேயர் மண்டபத்தில், தென்னிந்திய திருநங்கையா் கூட்டமைப்பு, தமிழக அரசின் சமூக நலத் துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மிஸ் கூவாக்கம் 2025 அழகிப் போட்டி   நடைபெற்றது. இந்த போட்டியில் 25 திருநங்கைகள் பங்கேற்றனர். இவர்களை தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் செயலாளர் கங்கா நாயக் வரவேற்றார். 




தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் தலைவர் மோகனாம்பாள் தலைமை தாங்கினார். இதன் நிர்வாகிகள் குயிலி, சுபிக்ஷா, நூரி, விமலா, கங்கா ஷர்மிளா சோனியா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நடிகைகள் தேவிப்பிரியா, வனிதா விஜயகுமார், சஞ்சனா சிங், கோவை பாபு அருண் சுவாமிகள் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அதேபோல் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் ஏராளமானோர்  பங்கேற்றனர்.‌இதில் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சிகள், தனித்திறன், நடனம் என  நிகழ்ச்சி களை கட்டியது.


இந்த அழகி போட்டியில் பங்கேற்ற 25 திருநங்கைகளின் ரேம்போவாக், பாரம்பரிய உடை அணிந்தல் ஆகியவை அடிப்படையில் முதற்கட்ட தேர்வு  நடைபெற்றது. பின்னர் தேர்வு செய்யப்பட்ட திருநங்கைகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


அதில், மிஸ் கூவாக்கம் 2025 அழகிப்போட்டி பட்டத்தை திருநெல்வேலியை சேர்ந்த ரேணுகா தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஞ்சனாவும், மூன்றாம் இடத்தை கோவையை சேர்ந்த ஆஸ்திகாவும் வென்றனர். இதனையடுத்து அழகி போட்டியில் வென்ற திருநங்கைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கிரீடம் சூடி ரொக்க பரிசு தொகையை வழங்கி கௌரவித்தனர்.