சாக்லேட்டுக்கு குட்பை! தேவக்கோட்டையில் கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தினம் கொண்டாட்டம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வெளிநாட்டுச் சாக்லேட்டுகள் வழங்கப்படும். ஆனால், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாக்லேட்டுக்கு பதிலாக கடலை மிட்டாய் வழங்கி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின் போது ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செல்வம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் வழங்கப்பட்டது.
குறிப்பாக, இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர். மேலும், குடியரசு தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. அதில் வெற்றி மாணவ, மாணவியர் நந்தனா, ருத்ரேஸ்வரன், ரித்திகா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏராளமான பெற்றோரும் பங்கேற்றனர். ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
குழந்தைகளுக்குச் சாக்லேட் கொடுப்பதை விட, சத்து நிறைந்த கடலை மிட்டாய் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நமது பண்பாட்டையும் ஆரோக்கியத்தையும் ஒருசேரக் காக்கும் முயற்சி எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த மாற்றத்தைப் பாராட்டியுள்ளனர்.