அனுமன் சிலையை வேற்றுகிரவாசி என்று வர்ணித்த டிரம்ப் ஆதரவாளர்.. இந்துக்கள் கடும் எதிர்ப்பு

Su.tha Arivalagan
Feb 19, 2026,10:30 AM IST

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இந்தியக் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் நிறுவப்பட்டுள்ள 90 அடி அனுமன் சிலை குறித்து குடியரசுக் கட்சி பிரமுகர் கூறியுள்ள கருத்து பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஊடுறுவல் முயற்சி நடக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்று அவர் இந்தியர்களை வர்ணித்துள்ளார். இந்தியர்களை ஊடுறுவல்காரர்கள் என்றுஅவர் கூறியுள்ளதை பலரும் கண்டித்துப் பேசி வருகின்றனர். அந்த நபரின் பெயர் கார்லோஸ் துர்சியோஸ். 


டெக்சாஸின் ஹூஸ்டன் பகுதியில் உள்ள சுகர்லேன்ட் என்ற இடத்தில் 90 அடி உயரத்தில் ஸ்ரீ பஞ்சமுக அனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிலேயே மிக உயரமான சிலைகளில் ஒன்றாகும். அமெரிக்காவின் 3வது உயரமான சிலை என்ற பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது.




இந்தச் சிலையை விமர்சித்த கார்லோஸ் துர்சியோஸ், தனது சமூக வலைதளப் பக்கத்தில், இது இஸ்லாமாபாத்தோ அல்லது டெல்லியோ இல்லை. ஹூஸ்டன். மூன்றாம் உலக ஏலியன்கள் ஹூஸ்டன் பகுதியில் தடம் பதிக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும். இந்த சிலை ஏன் அமெரிக்காவின் 3வது உயரமான சிலையாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


அனுமன் சிலையை வேற்று கிரகவாசி என அவர் குறிப்பிட்டது இந்து சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


கார்லோஸ் துர்சியோஸ் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவான மீண்டும் அமெரிக்காவை வலிமையாக்குவோம் அமைப்பின் டெக்சாஸ் கிளையில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர். இவரது இந்தக் கருத்து இனவெறி கலந்தது என்றும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.


இந்தச் சிலை அமைதியையும், பக்தியையும் குறிக்கும் அடையாளம் என்றும், அதைக் கேலி செய்வது கண்டிக்கத்தக்கது என்றும் இந்திய வம்சாவளியினர் தெரிவித்துள்ளனர். "அமெரிக்கா ஒரு மத சுதந்திர நாடு, இங்கு மற்ற மதங்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்" என்று அவருக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


ஹூஸ்டன் அனுமன் சிலை ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது.